நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இம்மாநில தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் மனைவி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதே போன்று ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் சேர்ந்து பிரசாரம் செய்தனர். அவர்களது தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அளவுக்கு அதிகமாக மக்கள் வந்தனர்.
எனவே குறைந்தது 30 தொகுதியிலாவது வெற்றி பெற முடியும் என்று சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கருதியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியா கூட்டணி தலைவர்களின் தீவிர பிரசாரம் இந்தியா கூட்டணிக்கு கை கொடுத்து இருக்கிறது. பிரதமர் மோடி அலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது போன்றவை மூலம் மக்களிடம் வாக்குகளை வாங்கிவிட முடியும் என்று பா.ஜ.க கருதியது. ஆனால் பா.ஜ.க-விற்கு அது கைகொடுக்கவில்லை என்பது போலவே தெரிகிறது.
கடந்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்க உதவிய உத்தரப்பிரதேசத்தில் இந்த முறை பா.ஜ.க இதுவரை வெறும் 40 தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திகூட பின் தங்கி இருக்கிறார். கடந்த தேர்தலில் 5 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று, இம்முறை சமாஜ்வாடி கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்து வந்ததோடு மாநிலம் முழுவதும் தொழில்களை விரிவுபடுத்துதல் மற்றும் சாலை போன்ற கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினார். ஆனாலும் அது பா.ஜ.க-விற்கு கைகொடுக்கவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
from India News https://ift.tt/43WBZef
0 Comments