கள்ளக்குறிச்சி: அலறும் ஆம்புலன்ஸ்கள்... அதிகரிக்கும் உயிரிழப்புகள்… காவு வாங்கிய கள்ளச்சாராயம்!

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு ஆண்கள், இன்று காலை சுயநினைவற்ற நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் கருணாபுரம் பகுதியில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை குடித்ததன் காரணமாகவே உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், `அவர்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கவில்லை. தவறான தகவல்களை பரப்புக் கூடாது. உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். அதேசமயம் அவர்களில் மூன்று பேருக்கு மதுப்பழக்கம் இருந்திருக்கிறது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்.

அதேபோல, `காவல்துறையின் விசாரணை முடியும் வரை இது போன்ற தகவல்களால் யாரும் அச்சமடைய வேண்டாம்’ என்று மாவட்ட காவல்துறை சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அதையடுத்து கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பல ஆண்கள், கண் பார்வை எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்ற காரணங்களாலும், சுயநினைவற்ற நிலையில் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மிகவும் கவலைக்கிடமாக இருந்தவர்களை புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அடுத்தடுத்து அனுப்பி வைத்தனர்.

கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலரை, அவர்களது உறவினர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக வெளியாகும் செய்தியை பார்த்து, சுயநினைவின்றி கிடக்கும் தங்களது உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் ஆம்புலன்ஸ்கள் இடைவிடமால் அலறிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு, கள்ளக்குறிச்சி போலீஸாரை கூண்டோடு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க உயிரிழந்த மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களின் உறவினர்களின் இடைவிடாது அழுகுரல்கள், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஒலித்தபடியே இருக்கிறது.

இதுவரை இரவு 9:45 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 75 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் போலீஸார்.

இதற்கிடையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்துவந்து, அங்கு சிகிச்சை பெறுவோரின் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.



from India News https://ift.tt/i6lvUS9

Post a Comment

0 Comments