`கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கும் நோக்கில் ஓசூரில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாக' சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பான அறிப்பை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ``2022-ம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை!" எனத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ``ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K. சிங், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.
இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார். அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தி.மு.க எம்.பி வில்சன், ``தமிழக மக்களின் நலன்களை தியாகம் செய்து, அரசின் அனுமதியின்றி சுதந்திரமான, வளர்ச்சிக்கான உரிமைகளை தியாகம் செய்து, கர்நாடகாவின் மைசூர் மற்றும் ஹாசனில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அப்படி தமிழக நலனுக்கு எதிராக அமைச்சர் வி.கே. சிங் எடுத்த முடிவை அண்ணாமலை ஆதரிக்கிறாரா? ஓசூருக்கு விமான நிலையம் மறுக்கப்படுவதை அண்ணாமலை ஆதரிக்கிறாரா? நமது முதலமைச்சர் ஸ்டாலின், ஓசூர் விமான நிலையத் திட்டத்தை அறிவித்ததன் மூலம் தமிழக மக்களின் உரிமைகளை நியாயமாக நிலைநாட்டியிருக்கிறார். இந்த அறிவிப்பு சுதந்திரமான, வளர்ச்சி மற்றும் கூட்டாட்சியின் அரசியலமைப்பு உரிமைகளை நிரூபிக்கிறது. இந்தச் சலுகை ஒப்பந்தம் வணிக நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை ஒருபோதும் பிணைக்காது என்று அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டுக்கு ஏதாவது மறுக்கப்பட்டால் அண்ணாமலையும் அவரின் கட்சியும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன. அண்ணாமலை, நீங்கள் இனி கர்நாடகாவில் வேலை செய்ய மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/p3P5FhI
0 Comments