தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பதிவு எண் கொண்ட 647 பேருந்துகளும் அடங்கும். இவை தமிழக பதிவு எண்ணுக்கு மாற வேண்டும் என சாலை போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியது. இதையடுத்து அவ்வாறு 105 பேருந்துகள் தங்களது பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றின. மீதம் உள்ள 547 ஆம்னி பேருந்துகள் அப்படியே இயங்கி வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு, 'உடனடியாக தமிழக பதிவு எண்ணுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்கி வந்தார்கள்.
இந்த சூழலில்தான் தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்த பேருந்து உரிமையாளர்கள், 'கால அவகாசம் வேண்டும்' என கோரிக்கை வைத்தார்கள். மேலும் வார இறுதி விடுமுறை, பக்ரீத் விடுமுறை என தொடர் விடுமுறை வந்தது. இந்த நேரத்தில், பதிவு எண் விவகாரத்தில் ஆம்னி பேருந்து தடை அமலுக்கு வந்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற குரலும் ஒலித்தது. இதையடுத்து கால அவகாசம் இரண்டு நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நிறைவடைந்ததையடுத்து 547 பேருந்துகளும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பிறகு சென்னை, கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் அன்பழகன், "தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டில் இருந்து தான் படுக்கை வசதி பேருந்துகளுக்கு உரிமம் வழங்குகிறார்கள். அதற்கு முன்பாக நாங்கள் சாலை வரி குறைவாக உள்ள வெளி மாநிலங்களில் பதிவு செய்து வாகனத்தை இயக்கி வந்தோம். தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.4000 சாலை வரி செலுத்துகிறோம். வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.5500 செலுத்துகிறோம்.
இருப்பினும் தமிழக அரசு தமிழ்நாட்டில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. எனவே பாதி பேருந்துகளை நாங்கள் தமிழகத்தில் பதிவு செய்துவிட்டோம். பொருளாதாரப் பிரச்னைகள், தொடர் பண்டிகைகள், தேர்தல் ஆகியவை காரணமாக பதிவு செய்ய முடியாமல் போனது. கடந்த 3 நாள்களாக போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்று காலை 7 மணிக்குகூட சந்தித்து பேசினோம். மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டோம். குறைந்தது ஒரு மாத காலமாவது கொடுங்கள் என்றோம். ஆனால் அவர்கள் கால அவகாசத்திற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.
ஆம்னி பேருந்துகளை மறு பதிவு செய்ய சிறப்பு முகாம்களை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினோம். சராசரியாக ஒரு பேருந்தை நம்பி 12 தொழிலாளர்கள் இருக்கிறார்கள், பயணிகள் இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஒரு பேருந்துக்கு பெர்மிட் வாங்குவதற்கு அண்டை மாநிலங்களில் ஓரிரு நாள்களில் வாங்கிவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெர்மிட் வாங்க ஒரு மாத காலம் ஆகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்" என்றார்.
இந்த சூழலில் 'தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம். பிறமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும். விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசின் எச்சரிக்கை, விதிகளை மீறி, இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகள் இனி முடக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டால், அரசு பேருந்துகள் மூலம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்க எந்தத் தடையும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/2MK1QOG
0 Comments