ஜி.எஸ்.டி மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் தலைவராக, சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதையொட்டி, நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜி.எஸ்.டி குறித்து சில விவரங்களை பதிவிட்டிருக்கிறார். அது தேசிய அளவில் கவனத்துக்குரிய, விவாதத்துக்குரிய செய்தியாக மாறியிருக்கிறது.
அந்தப் பதிவில், ``ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏப்ரல் மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இவை இரண்டும் ஜி.எஸ்.டி கட்டமைப்பில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்கள்’ என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ‘மத்திய அரசு ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியபோது, ஏழைகளுக்கு சாதகமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
2017-ம் ஆண்டிலிருந்து சராசரி ஜி.எஸ்.டி. விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப்பு போன்ற பொதுவான பொருள்களுக்கான வரி விகிதம் 28 சதவிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. மின்சாதனங்களின் வரி விகிதம் 31.5 சதவிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. சுகாதாரம், கல்வி, பொதுப்போக்குவரத்து, சானிட்டரி நாப்கின்கள், விவசாய சேவைகள் போன்ற பல அத்தியாவசியப் பொருள்கள்மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக ஜி.எஸ்.டி திகழ்கிறது. மேலும், மாநிலங்களுக்கும் அது அதிகாரம் அளிக்கிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு 75 சதவிதம் பெரும்பான்மை வாக்கு தேவை என்ற நிலையில், மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமையை மத்திய அரசுக்கும், மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஜி.எஸ்.டி தொடர்பாக நடைபெற்ற 52 கூட்டங்களில், ஒன்றைத் தவிர அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்து மூலமே எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் தலைவராக அனைத்து மாநிலங்களின் குரல்களும் பாரபட்சமின்றி சமமாக ஒலிக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறேன். ஜி.எஸ்.டி வசூல் அனைத்தும் மத்திய அரசுக்கு மட்டுமே சொந்தமானது என்பது கட்டுக்கதை. மாநிலங்களுக்கு கணிசமான வருவாய் பங்களிப்பை ஜி.எஸ்.டி வழங்குகிறது. மாநிலங்கள் அந்த மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட எஸ்.ஜி.எஸ்.டி-யில் 100 சதவிகிதம் பெறுகின்றன’ என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜி.எஸ்.டி குறித்து பெருமைபொங்க பல கருத்துகளையும், பல்வேறு தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு ஜி.எஸ்.டி-யின் பெருமைகளையும் நிர்மலா சீதாராமன் குறிப்பிடுவது இது முதன்முறை அல்ல. தொடர்ந்து இவ்வாறு அவர் கூறிவருகிறார். ஆனால், ஜி.எஸ்.டி குறித்து தமிழ்நாடு, கேரளா உள்பட பா.ஜ.க அல்லாத மாநிலங்களிலிருந்து ஒலிக்கும் குரல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன.
தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், இன்றைய நிதியமைச்சர் பாலகோபால் உள்பட பலரும் ஜி.எஸ்.டி-யின் பாதிப்புகள், அதில் இருக்கும் குறைபாடுகள், ஜி.எஸ்.டி தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பதுடன், அதற்கான ஆதாரங்களையும் அடுக்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீதான பதிலுரை ஆற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம்’ என்றார்.
மேலும், ‘மத்திய அரசு தனது வரிகள் மீது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை, அதாவது Cess and Surcharges விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இத்தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தத் தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. 2021-22 ஆண்டில் cess and surcharge மூலம் மத்திய அரசு 5.85 லட்சம் கோடி ரூபாயைத் திரட்டியது. 2022-23 ஆண்டில் 6.19 லட்சம் கோடி ரூபாய், 2023-24 ஆண்டில் 6.5 லட்சம் கோடி ரூபாய், 2024-25 ஆண்டில் 6.95 லட்சம் கோடி ரூபாய் என வசூலித்திருக்கிறது.
மத்திய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தை கடைபிடித்து இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், தமிழகத்துக்கு 2021-22 ஆண்டில் 9,000 கோடி ரூபாய், 2022-23 ஆண்டில் 10,300 கோடி ரூபாய், 2023-24 ஆண்டில் 10,900 கோடி ரூபாய், 2024-25 ஆண்டில் 11,600 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்’ என்றார் தங்கம் தென்னரசு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/M9Ev3tG
0 Comments