பிஜு ஜனதா தளம், பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நிலவி வரும் மும்முனை போட்டியால் அனல் தகித்து கிடக்கிறது, ஒடிசா அரசியல் களம். போதாக்குறைக்கு "ஒடிசாவில் ஜூன் 4-ம் தேதி பி.ஜே.டி அரசு காலாவதியாகப் போகிறது. இதையடுத்து பா.ஜ.க சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம்" என பேசி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி இருக்கிறார், பிரதமர் மோடி. எனவே இந்தமுறை ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் கோட்டை தகர்க்கப்படுமா என்ற கேள்வி விவாதமாகி இருக்கிறது.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பிஜு ஜனதா தளம், பா.ஜ.க, காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றியது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம். பா.ஜ.க 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸால் ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அப்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம், பா.ஜ.க தனித்து களம் கண்டது. சி.பி.ஐ, சி.பி.எம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். இதில், பிஜு ஜனதா தளம் - 112, பா.ஜ.க - 23, காங்கிரஸ் - 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த சூழலில்தான் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?
ஒடிசாவின் அரசியலை உற்று நோக்கி வரும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், "பா.ஜ.கவை பொறுத்தவரையில், 'தொடர்ச்சியாக ஒரே முதல்வர் ஆட்சியில் இருப்பதால் ஒடிசா வளச்சியடையவில்லை. அனைத்து முடிவுகளையும் எடுப்பது வி.கே.பாண்டியன்தான். இந்தமுறை மத்தியில் பா.ஜ.க ஆட்சிதான் அமையும். எனவே, மாநிலத்திலும் பா.ஜ.கவுக்கு வாய்ப்பளித்தால் ஒடிசா முன்னேற்றம் அடையும்' என பிரசாரம் செய்து வருகிறது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ், 'பா.ஜ.க-வும், பிஜூ ஜனதா தளமும் திரைமறைவில் ஒன்றாக இருக்கிறார்கள். வெளியில்தான் எதிரிபோல காட்டிக்கொள்கிறார்கள்' என, பிரச்சாரம் செய்து வருகிறது.
கூடவே ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை துவண்டிருந்த ஒடிசா தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. கூடவே அவர் எழுப்பிய சுரங்கத் தொழில் ஊழல்கள் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை, சுரங்கத் தொழில் ஊழல் போன்றவை பிஜு ஜனதா தளத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியனுக்கு முக்கியத்துவம் அளிப்பது சீனியர் நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது" என்றனர்.
இந்த சூழலில்தான் ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஜூன் 4-ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாக போகிறது. இதையடுத்து பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஜூன் 10-ம் தேதி பா.ஜ.க முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெறும். ஒடிசாவில் ஏராளமான நீர்வளம், வளமான கனிம வளங்கள், பரந்த கடற்கரை, பெர்ஹாம்பூர் போன்ற வர்த்தக மையம் உள்ளது. ஆனால் ஒடிசாவில் வளர்ச்சி இல்லை. இதற்கு 50 ஆண்டுகள் இம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸும், அடுத்த 25 ஆண்டுகள் இம்மாநிலத்தை ஆண்ட பிஜேடி கட்சியும் கொள்ளையடித்ததுதான் காரணம். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பாஜகவுக்கு தான். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவுக்கு என்னால் முடிந்ததை செய்வேன்” என்றார். இதற்கு பதிலளித்துள்ள நவீன் பட்நாயக், "பாஜக நீண்ட காலமாக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பகல் கனவு காண்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கள நிலவரம் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த விவரப்புள்ளிகள், "வி.கே.பாண்டியன் விவகாரம் பிஜூ ஜனதா தளத்துக்கு பின்னடைவை கொடுத்து இருக்கிறது. இருப்பினும் கருத்து கணிப்பு முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாவே இருக்கிறது. 11 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.கவை பொறுத்தவரையில் மோடி, அமித் ஷாவின் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபட்டு இருக்கிறது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான். அதேநேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 5 முதல் 10 தொகுதிகளை கைப்பற்ற கூடும். ராகுல், பிரியங்காவின் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் மாநில அளவில் சரியான தலைவர் இல்லாதது அவர்களுக்கு பின்னடைவுதான். எனவே அதை சரிசெய்ய வேண்டும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/OHf1s7Z
0 Comments