`மாவோயிஸ்ட் மொழியில் பேசுகிறார் இளவரசர்’ - மோடி குற்றச்சாட்டும் பின்னணியும்!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பா.ஜ.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மாவோயிஸ்ட் மொழியில் ராகுல் காந்தி பேசுகிறார்’ என்று விமர்சித்தார்.

நரேந்திர மோடி

பிரதமர் மோடி தனது உரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ‘இளவரசர்’ என்று வழக்கம்போல குறிப்பிட்டார். அப்போது, ‘ராகுல் காந்தி மாவோயிஸ்ட் மொழியில் பேசுவதால், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு தொழிலதிபர்கள் தயங்குகிறார்கள். அந்த மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு 50 முறை அவர்கள் யோசிக்கிறார்கள்’ என்றார் மோடி.

ராகுல் காந்தி மீது இப்படியொரு கடுமையான விமர்சனத்தை பிரதமர் மோடி முன்வைத்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்பு, வேறு சில பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தி மீது இதேபோன்ற விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.

ராகுல் காந்தி

2023-ம் ஆண்டு, லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், பிரிட்டிஷ் எம்.பி-க்கள் மத்தியிலும் உரை நிகழ்த்தினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளான நாடாளுமன்றமும், ஊடகமும், நீதித்துறையும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக பிரதமர் மோடி நடத்துகிறார். ஸ்பைவேர் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கட்டுமானத்தை பிரதமர் மோடி தகர்த்துவருகிறார்” என்று விமர்சித்தார்.

அதேபோல, பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேசுவதற்கு அரசு அனுமதிப்பதில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., சீன ராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதி தரப்படுவதில்லை. வெறுப்பும் வன்முறையும்தான் பா.ஜ.க-வின் கொள்கைகள். ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு. அரசியல் சாசனப்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது” என்று சாடினார்

நாடாளுமன்றம்

‘அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு எதிராகப் பேசுகிறார்’ என்று ராகுலுக்கு எதிராக பா.ஜ.க-வினர் கொந்தளித்தனர். ராகுல் காந்தி தனது பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கினர்.

அந்த நேரத்தில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ‘ராகுல் காந்தி தனது கூட்டாளிகள் மூலம் முழுமையாக மாவோயிஸ்ட் சிந்தனையின் பிடியில் இருக்கிறார்’ என்று விமர்சித்தார்.

ரவிசங்கர் பிரசாத்

தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலையொட்டிய பிரசாரத்தில், ‘பிரதமர் மோடி, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அவர்களுக்கு, வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறார்’ என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி தொடர்ந்து முன்வைத்துவருகிறார்.

மேலும், ‘பா.ஜ.க ஆட்சியில் 25 பெரும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், ஏழை, எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். அதற்கு, ‘ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவரா?’ என்று கடுமையாக விமர்சித்தார் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா.

தேவ கௌடா

பெரும் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கப்படும் வரிச்சலுகைகள், கடன் தள்ளுபடிகள் குறித்து ஓர் அரசியல் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினால், ‘மாவோயிஸ்ட்’ என்று முத்திரை குத்தி, அவரது வாயை அடைப்பதற்கு பா.ஜ.க-வினரும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியினரும் முயற்சி செய்கிறார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்பிய எழுத்தாளர்களையும், வழக்கறிஞர்களையும், அறிஞர்களை ‘நகர்ப்புற நக்சலைட்கள்’ என்று பிரதமர் மோடியும், உள்துறை அமித் ஷாவும் குற்றம்சாட்டினார். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் தலைவர்களின் வாயை அடைக்க, ‘மாவோயிஸ்ட்’, ‘நக்சலைட்’ என்ற சொல்லாடல்கள் பயன்படுத்துவது சரியா... என்ற கேள்வி எழாமல் இல்லை!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/N18o09Q

Post a Comment

0 Comments