இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணையைக் கட்டிவிட்டால், அமராவதி அணைக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும். அந்த பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை உடனே தி.மு.க அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அதோடு அவர் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க-வும், கேரளாவில் ஆளும் கட்சியான சி.பி.எம்-மும் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் நிலையில், ‘தேர்தல் கூட்டணி ஆதாயத்துக்காக கள்ள மெளனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக தி.மு.க அரசு அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கிறது’ என்ற விமர்சனத்தையும் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கிறார்.
அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
“காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயல்கிறது. அதுபோன்றதுதான் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்ட மேற்கெள்ளும் நடவடிக்கைகளும். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால், அதிலிருந்து அமராவதிக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது” என்ற அச்சத்தை அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன.
இந்த நிலையில், சிலந்தி ஆறு தடுப்பணை விவகாரம் குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரனிடம் பேசினோம். “அமராவதி ஆற்றின் கிளை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகக் குறைவான கொள்ளளவில் கேரளா அரசு அணை கட்டுகிறது. அமராவதியில் 3 டி.எம்.சி தண்ணீரை கேரளா எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவு தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 3 டி.எம்.சி-க்கு மேல் கேரளா எடுக்கிறதா என்பதுதான் நம்முடைய கேள்வி.
பவானியில் 6 டி.எம்.சி-யும், சிலந்தி ஆற்றில் 3 டி.எம்.சி-யும் எடுத்துக்கொள்வதற்கான உரிமையை கேரளாவுக்கு இருக்கிறது. அந்த மூன்று டி.எம்.சி-க்குள் குடிநீருக்காக எடுத்தால், அதை தமிழ்நாடு சட்ட ரீதியாக எதிர்க்க முடியாது.
தமிழ்நாட்டை கேட்காமல் கேரளா தடுப்பணை கட்டுகிறது என்றால், அது குறித்து தீர்ப்பாயத்தில் நாம் முறையிடலாம். குடிநீருக்காக தடுப்பணை கட்டுகிறார்கள் என்றால், அதை நாம் தடுக்க வேண்டியதில்லை.
இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக அணுகக்கூடாது. இதில் ஆட்சேபணைக்குரிய பிரச்னை ஏதாவது இருந்தால், கேரளா அரசும், தமிழ்நாடு அரசும் பரஸ்பரம் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்கிறார் வே.ஈஸ்வரன்.
இதனிடையே, இது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தனர்.
அப்போது, 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரளா அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா?' என கேள்வி எழுப்பினர். மேலும், உரிய அனுமதி பெறாவிட்டால் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம், இவ்வழக்கு விசாரணையை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்த தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு, வட்டவடா என்று கேரளாவில் அழைக்கப்படுகிறது. 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 04.04.2024 அன்று நடைபெற்றது. அதில், காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும், கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் உறுப்பினர் மற்றும் அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் வலியுறுத்தினார்.
மேலும், காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடகா, கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், அதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது’ என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/M4PiLJU
0 Comments