சிறை வாசத்துக்குப் பிந்தைய கெஜ்ரிவாலின் பிரசாரம்... வரவேற்பு எப்படி?!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவர் மைக் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வை கடுமையாக அட்டாக் செய்கிறார்.

கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்த நிலையில், அவர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மற்றொரு வழக்கில் அவரை சிறையில் வைப்பதற்கான முயற்சி நடைபெற்றது.

ஆனாலும், அவருக்கு மே 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். தற்போது, டெல்லி, உ.பி., பஞ்சாப் என்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவரும் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவருகிறார்.

கெஜ்ரிவால்

சிறையிலிருந்து வந்தவுடன் டெல்லியில் சாந்தினி சௌக் தொகுதியில் பிரசாரம் செய்த கெஜ்ரிவால், ‘சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்திருக்கிறேன். நான் செய்த தவறு என்ன? ஏழைகளுக்காக தரமான பள்ளிக்கூடங்கள், இலவச கல்வி, 24 மணி நேரமும் மின்சாரம் போன்றவற்றை மக்களுக்கு செய்துகொடுத்ததுதான், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை நான் செய்த தவறுகள். இப்போது, மீண்டும் நான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். நீங்கள் தாமரை சின்னத்தில் அழுத்தினால் நான் மீண்டும் சிறை செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்தால், நான் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காது’ என்றார். டெல்லி வாழ் மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் கெஜ்ரிவால், இப்டி சென்டிமென்டாகப் பேசுவது டெல்லி மக்களிடம் எடுபடுகிறது என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள்.

அமித் ஷா- யோகி - மோடி - கெஜ்ரிவால்

இன்னொரு புறம், பா.ஜ.க-வுக்கு எதிரான கடும் விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம், பா.ஜ.க தலைவர்களை அவர் கதறவிடுகிறார். உதாரணமாக, ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பா.ஜ.க-வினரின் கேள்வி. ‘இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு பிரதமர் என ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமர்கள் வருவார்கள்’ என்று மோடி பிரசாரம் செய்கிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான், ’பா.ஜ.க-வில் 75 வயதானவர்களுக்கு ஒய்வு என்ற நடைமுறை இருப்பதால் அடுத்த ஆண்டு மோடி பிரதமராக இருக்க மாட்டார். பா.ஜ.க-வுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு மோடிக்கான வாக்கு அல்ல.. அது அமித் ஷாவுக்கான வாக்கு‘ என்று புதிய குண்டைத் தூக்கிவீசினார் கெஜ்ரிவால்.

யோகி ஆதித்யநாத்

உடனே, அவசர அவசரமாக பா.ஜ.க தலைவர்கள் எல்லோரும் வந்து கெஜ்ரிவாலுக்கு மறுப்பு தெரிவித்தார்கள். அடுத்து உத்தரப்பிரதேசத்துக்குச் சென்ற கெஜ்ரிவால், அங்கு யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக ஒரு குண்டைத் தூக்கி வீசினார். ‘பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த இரண்டு வாரங்களில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நீக்கப்படுவார்’ என்றார் கெஜ்ரிவால். இவ்வாறு அவர் பேசிய பிறகு, உ.பி அரசியல் வட்டாரத்திலும், பா.ஜ.க-வினர் மத்தியிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

உடனே கெஜ்ரிவால் மீது பாய்ந்தார் யோகி. ‘அன்னா ஹசாரேவின் லட்சியத்தைத் தகர்த்தெறிந்து ஊழல்வாதிகள் பக்கம் நிற்கும் கெஜ்ரிவால், இப்போது என்னைக் குறிவைக்கிகிறார். அன்னா ஹசாரேவால் எதிர்க்கப்பட்ட காங்கிரஸை, தனது கழுத்தில் மாலையாக அவர் அணிந்திருக்கிறார்’ என்று கெஜ்ரிவாலைத் திருப்பித் தாக்கினார் யோகி.

கெஜ்ரிவால் - அகிலேஷ் யாதவ்

தற்போது, ‘220 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க தாண்டாது’ என்று கூறும் கெஜ்ரிவால், ‘மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால், அந்த ஆட்சியில் ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும்‘ என்று பிரசாரம் செய்துவருகிறார். கெஜ்ரிவாலின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கி, பா.ஜ.க தலைவர்கள் எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவரின் விமர்சனங்கள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் பாஜக-வினர் வான்டெடாக வந்து பதில் சொல்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/38lgO7B

Post a Comment

0 Comments