மோடியும், அமித் ஷாவும் டார்கெட் செய்யும் `தமிழர்’ - ஒடிசாவில் வி.கே.பாண்டியனின் `பவர்’ என்ன?

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கின் ’அரசியல் வாரிசு’ என்று வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ்-ஸை சொல்லலாம். தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவரான வி.கே.பாண்டியன், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் ஆக பல முக்கியப் பதவிகளை வகித்து, கடந்த ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று, முழுநேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.

அமித் ஷா

தற்போது ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றுவருகிறது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இந்த முறை அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முனைப்பு காட்டிவருகிறார்கள். இந்த நிலையில், அங்கு பிரசாரம் செய்த மோடியும், அமித் ஷாவும். நவீன் பட்நாயக்கை விமர்சித்ததைவிட, வி.கே.பாண்டியனை டார்கெட் செய்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

அமித் ஷா தனது பிரசாரத்தின்போது, ‘தற்போது ஒடிசாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரால் ஒடிசாவை ஆள முடியுமா? நீங்கள் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்து இங்கு பா.ஜ.க அரசு அமையுமானால், ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் இங்கு முதல்வராக வருவார்’ என்று பிரசாரம் செய்தார்.

மோடி

பிரதமர் மோடியோ, வி.கே.பாண்டியனின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை விமர்சித்தார். பூரி ஜெகந்நாத் கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டது என்றார் மோடி. இந்தப் பேச்சுக்காகத்தான், ‘ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்துகிறார்... தமிழ்நாட்டை அவமதிக்கிறார்’ என்று மோடியை வன்மையாகக் கண்டித்தார் ஸ்டாலின்.

ஒடிசாவில் 20 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் இருந்து மாநிலம் முழுவதும் பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி, ஒடிசா மக்கள் மத்தியில் ஒன்றெனக் கலந்துவிட்டார் வி.கே.பாண்டியன். ‘ஒடிசாவின் பாகுபலி’ என்று ஒடிசா மக்களால் அழைக்கப்படுபவராகவும் அவர் இருக்கிறார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த வி.கே.பாண்டியன் எனப்படும் வி.கார்த்திகேயன் பாண்டியன், ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த பிறகு, நேரடி அரசியலில் குதித்தார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக்.

வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்

ஒடிசாவில் நிர்வாகம், உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் ஒடிசா அடைந்திருக்கும் முன்னேற்றத்தில் வி.கே.பாண்டியனுக்கு பங்கு உண்டு. காலஹந்தி மாவட்டத்திலுள்ள தர்மகாரில் சப் கலெக்டராக பணியாற்றபோது, விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆதரவாக இருந்ததுடன், நெல் கொள்முதலில் நிலவிய பல்வேறு பிரச்னைகளுக்கு அவர் தீர்வுகண்டார். பொதுப்பணித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றார்.

நவீன் பட்நாயக்

முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் ஆற்றிய பணிகளுக்காக ‘ஹெலன் கெல்லர் விருது’ பெற்றார் வி.கே.பாண்டியன். அந்த மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டதை நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக இரு முறை பிரதமரின் கையால் விருதுகள் பெற்றார். அந்த காலக்கட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அவர் நெருக்கமானார்.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றியபோது, ஐ.ஏ.எஸ் பணி விதிகளை மீறி அவர் செயல்படுகிறார் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த விவகாரம், ஒடிசா சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களே வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், வி.கே.பாண்டியனுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அவர்களால் அசைக்க முடியவில்லை.

மோடி - நவீன் பட்நாயக்

முதல்வர் நவீன் பட்நாயக்குகு தற்போது 78 வயதாகிறது. நவீன் பட்நாயக்கின் பெரும் நம்பிக்கைக்குரியவரான வி.கே.பாண்டியன்தான், தற்போது அங்கு நடைபெறும் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் பிஜு ஜனதா தளத்தின் பிரசாரத்துக்கு தலைமை தாங்குகிறார்.

பா.ஜ.க-வினரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் சொல்லும் வி.கே.பாண்டியன், ‘பா.ஜ.க தனது அரசியல் காரணங்களுக்காக என்னை ‘அவுட்சைடர்’ என்று விமர்சிக்கிறது. ஆனால், ஒடிசா மக்கள் அவ்வாறு சொல்வதில்லை. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒடிசாவில் பணியாற்றிவருகிறேன். ஒடிசா மக்கள் தங்களில் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால், நான் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் கொளுத்தும் வெய்யிலில் இவ்வளவு பெரும் திரளாக மக்கள் வருவார்களா?’ என்று கேட்கிறார்.

நவீன் பட்நாயக் - வி.கே.பாண்டியன்

வி.கே.பாண்டியன் மீது மோடியும், அமித் ஷாவும் பாய்ந்தாலும், அவர் அசைக்க முடியாத அளவுக்கு அதிகார மையத்தில் இருக்கிறார் என்ற உண்மை ஒடிசா அரசியலை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். எனவேதான், வி.கே.பாண்டியனை வீழ்த்துவதற்கு, அவரது அரசியல் எதிரிகள் எடுக்கும் ஒரே ஆயுதமாக ‘வெளிமாநிலத்துக்காரர்’ என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், அந்த விமர்சனத்தை எளிதாகக் கடந்துவிடக்கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்தவராக இருக்கிறார் வி .கே.பாண்டியன். சொல்லப்போனால், ஒடிசா மாநிலத்தின் மருமகன் அவர். ஒடிசாவைப் பூர்விகமாகக் கொண்ட சுஜாதாவைத்தான் அவர் மணம் முடித்திருக்கிறார். சுஜாதாவும் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/ITgqWrS

Post a Comment

0 Comments