தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான மாற்றத்துக்குத் தயாராகிவரும் அ.தி.மு.க., தொகுதிவாரியாகப் பெறப்போகும் வாக்குகள், பிரச்னைகள் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு குழு அமைத்து, ரிப்போர்ட் எடுத்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தென்மாவட்டத்தில் டேட்டா கலெக்ஷனுக்குச் சென்ற குழுவினரிடம், “நாங்கள் சொன்ன எதையுமே தலைமை கேட்கவே இல்லை. பா.ஜ.க-வுடனான முறிவைக்கூட வேலுமணியோடு சேர்ந்துகொண்டு தலைமையே முடிவுசெய்தது. தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டுமெனச் சொன்னபோதுகூட அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த முறை அ.தி.மு.க தோற்றால், அதற்கு முழுப் பொறுப்பையும் தலைமைதான் ஏற்க வேண்டும்” என ஆவேசம் காட்டினாராம் தென்மாவட்ட சீனியர் மாஜி. “இந்த விவகாரம் மேலே தெரிந்தால், என்னவாகும்?” என உடனிருந்தவர்கள் பதற்றப்பட, “தெரியட்டும் என்றுதான் சொன்னேன்” என மீண்டும் துணிச்சல் காட்டினாராம்!
“அவருக்கு ஏன் இந்த ஆசை..?”, “இதையும் நான் பறி கொடுக்கணுமா?” -மோதும் அமைச்சர்கள்!
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவையடுத்து, அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த சீட்டைப் பெற தி.மு.க தலைமையிடம் காய்நகர்த்தும் அரசியல் ஒருபுறம் தீவிரமாக நடந்துவருகிறது. மற்றொருபுறம், புகழேந்தி வகித்துவந்த ‘விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர்’ பதவியைப் பிடிக்கவும் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ‘எப்படியாவது தங்கள் ஆதரவாளர்களில் ஒருவருக்கு சீட் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்’ என சீனியர் அமைச்சர்கள் இருவர் தலைமையை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களாம். ``எப்படியும் அவருடைய வாரிசு மீதிருக்கும் வழக்கில் டெல்லி நெருக்கடி கொடுக்கும். பிறகு எதற்கு இதற்கெல்லாம் ஆசைப்படுகிறார்?” என எதிர்த்தரப்பு ‘இனிஷியல்’ அமைச்சர் சொல்ல… ``ஏற்கெனவே, என்னிடமிருந்த தொகுதியை அவருடைய ஆதரவாளருக்கு வாங்கிக்கொண்டு போய்விட்டார். இப்போது இதையும் இழந்துவிட்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா?” என மின்னும் அமைச்சர் குதிக்கிறாராம். அதிகார பலத்தை நிரூபிக்க மூத்த அமைச்சர்களுக்கு இடையே ஆரம்பித்திருக்கும் இந்தப் போட்டிதான் உடன்பிறப்புகள் மத்தியில் ஹாட் டாபிக்!
பொறுப்புகள் மாற்றம்… பரபரக்கும் கமலாலயம்!
``நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கட்சி நிர்வாகிகள் பலர்மீதும் பல்வேறு புகார்கள் எழுந்திருக்கின்றன. எனவே, முடிவுகள் வெளியான பிறகு, பா.ஜ.க-வில் மாவட்ட அளவில் தொடங்கி, மாநிலப் பொறுப்புகள் வரை பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்” என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதால், கமலாலயத்துக்குப் படையெடுக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக, மாநிலப் பொறுப்புகளைக் குறிவைத்துத்தான் பலரும் கமலாலயத்தைச் சுற்றிச் சுற்றிவருகிறார்களாம். இதற்காக, டெல்லி, நாக்பூரின் கருணைப் பார்வையைப் பெறும் நோக்கோடு, தங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்கிறார்களாம். இதற்கிடையே கிளை, மண்டல அளவிலான பதவிகளிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுவதால், கமலாலயமே பரபரத்துக்கிடக்கிறது.
“கட்சிக்குள்ள குழப்பம் ஏற்படுத்துறீங்களா?”
போன் போட்ட தலைமை… சோகமான செல்லூர் ராஜூ!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அண்மையில் ராகுல் காந்தி ஒரு ஹோட்டலில் சாப்பிடும் வீடியோவைப் பகிர்ந்து, ‘நான் பார்த்து, நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ எனப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். இதனால் கடுப்பான கட்சித் தலைமை, செல்லூராரைப் போனில் அழைத்து, ``யாரைக் கேட்டு இந்த வீடியோவைப் போட்டீங்க... கட்சிக்குள் தேவையில்லாம குழப்பத்தை ஏற்படுத்துறீங்களா... காலையிலருந்து எத்தனை போன் கால்கள் தெரியுமா?” என வறுத்தெடுத்துவிட்டதாம். பதறியடித்துக்கொண்டு அந்தப் பதிவை நீக்கிய செல்லூரார், ``அவங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, நான் என்ன சொல்ல வாரேன்னு கேக்காமலேயே போனை வெச்சுட்டாங்களே…” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சோகத்தைப் பகிர்ந்திருக்கிறார். ``அண்ணனின் ராஜதந்திரம் தலைமைக்குப் புரியவில்லை’' என்கிறார்கள் செல்லூராரின் விழுதுகள்!
பொங்கும் பெருந்தகை… புகார் தட்டிய சீனியர் கதர்கள்!
``ஆட்சியைப் பிடிப்போம்”, ``தனியார் பள்ளிகளிலுள்ள 25% இட ஒதுக்கீட்டில் பிரச்னைகள் இருக்கின்றன”, ``காமராஜர் நினைவிடப் பகுதி இடுகாடுபோல இருக்கிறது’’ எனத் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகப் பொங்கிவருகிறார் கதர்க் கட்சியின் புதிய தலைவர். இதையடுத்து, ``புதுசா டிரைவரானவன் தேவையில்லாம அடிக்கடி ஹாரன் அடிப்பான்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, எதுக்கு இவருக்கு இவ்வளவு ஆவேசம்... தேவை யில்லாம இவர் இப்படித் தொடர்ச்சியா தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைப் பேசினா, கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டு, அது நமக்குத்தான் பின்னடைவா அமையும்” எனப் பேசி முடிவெடுத்த சில கதர்ச்சட்டை சீனியர்கள், ‘டெல்லி தலைமை, பெருந்தகையைக் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டும்’ என டெல்லிக்கு புகார்க் கடிதங்களைத் தட்டியிருக்கிறார்களாம்!
கிடப்பில் போட்ட அதிகாரி... தூக்கியடித்த தலைமை... அதிர்ந்த கோட்டை!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குத் துறை மாற்றமும், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்ற தகவலையடுத்து, ‘தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கி, இப்படியொரு மாற்றத்தைச் செய்யவேண்டிய அவசரம் என்ன?’ என விசாரித்தால், ``தி.மு.க அரசு தங்களின் முக்கியத் திட்டமாக நினைப்பவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பிலிருக்கும் அந்த அதிகாரி, தன்னுடன் பணியாற்றும் ஜூனியர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருவதோடு, பல்வேறு திட்டங்களையும் கிடப்பில் போட்டுவிடுகிறார் என்ற புகார்கள் தொடர்ந்து மேலிடத்துக்குச் சென்றிருக்கின்றன. துறை மேலிடமும் அதை உறுதிசெய்திருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் இன்னும் சில திட்டங்களைச் செயல்படுத்த நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில், துறைக்குள் இப்படியொரு சிக்கல் நீடிப்பதை ஆளும் தரப்பு விரும்பவில்லை. எனவேதான் இந்த0 திடீர் மாற்றம்” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்!
from India News https://ift.tt/VBm0HGM
0 Comments