மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ``நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞரை போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி - இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார் - அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் கலைஞர்.
முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழகத்தின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் கலைஞர் தான்.
அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.” என்றார்.
தொடர்ந்து, ``நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.
இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் கலைஞர்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.
அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.
ஜூன்-3 அன்று கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.
திமுகவினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/UWLFQns
0 Comments