"தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களையும் மோடி வஞ்சிக்கிறார்.." என்று கடுமையாக பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரையில் நடந்த இந்தியா கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன், சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வந்திருக்கிறேன். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தையே, தென் மண்டல மாநாட்டைப்போல் நடத்திக்காட்டி இருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், பிரமாண்டமாகச் செய்து காட்டுவார். அவருடன் சிவகங்கைச் சீமையின் கழகக் காவலர் பெரியகருப்பனும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்.
தோழர் சு.வெங்கடேசன் நாடறிந்த எழுத்தாளர், பேச்சாளர். மதுரைக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல, இந்திய நாட்டிற்காகவும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருபவர். பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதச் செயல்கள் எதுவாக இருந்தாலும், அவரின் பாணியில் கண்டித்து, கவனத்தை ஈர்க்கக் கூடியவர். தன்னுடைய செயல்பாடுகளை, '5 ஆண்டுகள் -150 வெற்றிகள்' என்று புத்தகமாகவே போட்டிருக்கிறார். அவர் மீண்டும் மதுரையில் வெற்றி பெற்று, உங்கள் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.
ப.சிதம்பரம், இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய பொருளாதார அறிஞர். இந்தத் தேர்தலில் இந்தியாவின் கதாநாயகனாக திகழும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தவர். அவர் வழியில், பணியாற்றி வரும் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் அல்ல, இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது.
நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பவராக, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், நாளொன்றுக்கு 400 ரூபாய் கொடுப்பவராக, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பவராக, சமூகநீதி மேல் உண்மையான அக்கறையுடன், இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்தை உயர்த்துபவராக, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக்குபவராக, இந்திய ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை மதிக்கும் பிரதமராக இருப்பார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக, ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று நிச்சயம் இருக்க மாட்டார்.
கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தபோது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார். இ.டி, ஐ.டி, சி.பி.ஐ, ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார்.
பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி இப்போது பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது வாய் திறக்கவில்லையே? குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா?
மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று ஆறுதல் கூறினாரா?
ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பாஜக அமைச்சர்கள் ஊர்வலம் சென்றதற்குக் கண்டனம் எழுந்த உடனே கட்சித் தலைமைதான் அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா? உத்தரப்பிரதேசம் உன்னாவில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பாஜக எம்எல்ஏ. குல்தீப் சிங் வன்புணர்வு செய்தும், அந்தப் பெண் வெளியே சொல்லக் கூடாது என்று குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்கள். காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கில் சிறையிலேயே வைத்து கொன்றார்கள்? விரக்தியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் வீட்டுக்கு முன்பு அப்பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார், அதற்குப் பிறகும் அப்பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்ததில் அவரின் அத்தை இறந்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது மோடிதான்.
பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா? மோடி இந்த நாட்டிற்குச் செய்தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார். எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொல்லப்பட்டதை மவுனமாக வேடிக்கை பார்த்தார். மதவெறியர்களின் வன்முறையையும், கொலைகளையும், தாராளமயமாக்கினார். இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது" என்றார்.
from India News https://ift.tt/iwFJnqu
0 Comments