விருதுநகர்: 'காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்தியாவே திரும்ப மீட்கப்படும்!' - செல்வபெருந்தகை

விருதுநகர் மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், படித்த பட்டதாரி மற்றும் டிப்ளமோ இளைஞர்களுக்கு 25 வயது பூர்த்தியாகும் வரை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், வேளாண்மை நலனுக்காக சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்களை அமல் செய்வது,

பிரசாரம்

நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகளின் முடிவுக்கு விடுவது, மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவது உட்பட வரலாற்று சிறப்புமிக்க வாக்குறுதிகளை நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.‌ இண்டியா கூட்டணிக்கு ஐயம் கிடையாது, அதனால், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறோம். ஜனநாயகத்திற்கான மனசாட்சி தான் இண்டியா கூட்டணி. இந்தியாவில் பாசிச பா.ஜ.க ஆட்சியை அகற்றிவிட்டு ஜனநாயகத்தை புதுப்பிப்பதற்கான கூட்டணி தான் இண்டியா கூட்டணி. இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும் இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று. மோடி எல்லா இடங்களிலும் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பேசிவருகிறார். அவர், சொன்னதை ஒருபோதும் செய்தது கிடையாது.

பிரசாரம்

அதுபோலத்தான் தற்போது அவர் சொல்வதுபோல 400 இடங்களுக்கும் மேல் பா.ஜ.க. வெற்றிபெறும் எனச்சொல்வதும் நடக்காது. காங்கிரஸ்தான் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறப்போகிறது. பெங்களூருவில் காபி ஷாப்பில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வெடிகுண்டு வைப்பவர்கள் என விமர்சனம் செய்தார்கள். அதற்கு பா.ஜ.க.வினர் சின்ன கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கடைசியில் அந்த விஷயத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த நபர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே ஒரு விஷயத்தை திசை திருப்புவதுதான் பா‌.ஜ.க.வின் கொள்கை. இதுதான் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சி. கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான், திருப்பி எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.

செல்வபெருந்தகை பேச்சு..

அருணாச்சல பிரதேசத்தின் 30க்கும் மேற்பட்ட இடங்களை சீன அரசு மாண்டரின் மொழியில் பெயர் மாற்றம் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக காண்பித்துள்ளது. இதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது. இவர்கள் கச்சத்தீவு விஷயத்தை பற்றி பேசுகிறார்களா?" எனக் கூறினார். அப்போது, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மீட்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, 'காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்தியாவே திரும்ப மீட்டெடுக்கப்படும்' என பதில் கூறினார்.



from India News https://ift.tt/fwPFu2a

Post a Comment

0 Comments