அரசு பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பெண் மேயர் - ஆபாச சைகையா? முந்திச்செல்வதில் தகராறா?

நாட்டின் இளம் பெண் மேயர் என அறியப்பட்டவர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன். சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன், அதே கட்சியை சேர்ந்த இளம் எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆர்யா ராஜேந்திரனும், அவரது கணவரான சச்சின் தேவ் எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் காரில் சென்றுள்ளனர். அப்போது கே.எஸ்.ஆர்.டி.சி சூப்பர் பாஸ்ட் பஸ்ஸை ஓட்டிச் சென்ற டிரைவரான யது என்பவர், ஆபாச சைகை காட்டியதாக குற்றம்சாட்டி மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் அவரது கணவர் சச்சின் தேவ் ஆகியோர் பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

பின்னர் போலீஸார் அங்கு சென்று பஸ் டிரைவர் யதுவை அழைத்துச் சென்றனர். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பஸ்ஸில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்களில் பயணத்தை மேற்கொண்டனர். அதே சமயம் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யது கூறுகையில், "திருச்சூர் - ஆலப்புழா - திருவனந்தபுரம் பஸ் அது. ஒன்வேயில் பஸ்ஸை மேயர் சென்ற கார் முந்திச்செல்ல முயன்றது. ஆனால், அங்கு பஸ்ஸை ஒதுக்கி வழிவிட இடம் இல்லை. அதைத்தொடர்ந்து இடது புறமாக அவர்கள் ஓவர்டேக் செய்து சென்றனர். அதன்பிறகுதான் பஸ்ஸை வழிமறித்து உனது அப்பாவின் ரோடா எனக்கேட்டு என்னிடம் தகராறு செய்தனர். நான் ஆபாச சைகை எதுவும் செய்யவில்லை" என டிரைவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அரசு பஸ்ஸை யாராவது வழி மறித்தால் அவர்மீது தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், பஸ் டிரைவர் யது அளித்த புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பஸ் டிரைவரிடம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவரான எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆகியோர் வாக்குவாதம் செய்யும் வீடியோவும் வெளியானது.

சச்சின் தேவ் எம்.எல்.ஏ- மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், "நானும் எனது கணவரும், எனது சகோதரரும் சகோதரர் மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தோம். பிளாமூடு பகுதியில் இருந்து பி.எம்.ஜி ஒன்வே சாலையில் எங்கள் கார் சென்றபோது இடது புறமாக ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் எங்கள் மீது மோதுவது போல் வந்தது. ஆனாலும், கார் முன்னால் சென்றுவிட்டது. நானும் என் சகோதரனின் மனைவியும் பின்பக்க கண்ணாடி வழியாக கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸை பார்த்தபோது பஸ் டிரைவர் எங்களை பார்த்து ஆபாசமாக ஆக்சன் காட்டினார். திடீரென கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் அப்படி நடந்துகொண்டது எங்களை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு இடையே அந்த பஸ் எங்கள் காரை மோதுவதுபோன்று முந்திச் சென்றது. பாளையம் பகுதியில் ரெட் சிக்னல் போட்டதால் அந்த பஸ் நின்றது. இதையடுத்து நாங்களும் சிக்னலில் காரை நிறுத்தி இறங்கி, எங்களிடம் ஆபாசமாக பேசியது குறித்து டிரைவரிடம் கேட்டோம். அதற்கு அவர் ஏதேதோ பேசியதுடன், நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு பிரச்னை இல்லை என ஆவேசாமாக கூறினார்.

அது மட்டுமல்லாது அவர் போதை பொருள் பயன்படுத்தி அந்த கவரை வெளியே வீசியதையும் பார்த்தோம். அவர் நாங்கள் கூறியதை பற்றி கவலைப்படாமல் இருந்தது அடுத்து, உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமாரை நான் போனில் அழைத்து விபரத்தை கூறினேன். அமைச்சர் உடனடியாக கே.எஸ்.ஆர்.டி.சி விஜிலன்ஸ் டீமை அனுப்புவதாக தெரிவித்தார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். போலீஸார் வந்தபிறகுதான் டிரைவர் சற்று மரியாதைகளுடன் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை பஸ்ஸுக்குள் இருந்து மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். எங்க காருக்கு சைடு தராத பிரச்சனை ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகவே நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்கள் காரால் பஸ்ஸை மறிக்கவில்லை. சிக்னலில் பஸ் நின்றபோது நாங்கள் முன்பு காரை நிறுத்தி நியாயம் கேட்டோம்" என்றார்.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யது

அதே சமயம் மேயர் பயணித்த சிவப்பு தனியார் கார் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸை வழிமறித்து குறுக்காக நிற்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. எனவே பஸ்ஸை முந்தி செல்வதில் ஏற்பட்ட பிரச்னையில் மேயரும், அவரது கணவரான எம்.எல்.ஏ-வும் தகராற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், "போலீஸ் விசாரணை அறிககை மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி விஜிலென்ஸ் பிரிவின் ரிப்போர்ட் ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை. அவை வந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். அதுவரை டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. போலீஸ் மற்றும் விஜிலென்ஸ் ஆகியவை அளிக்கும் ரிப்போர்ட்டில் டிரைவர் மீது தவறு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். மேயர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் எதிராக இருப்பதால் பாவப்பட்ட டிரைவரை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கை எல்லாம் எடுக்க மாட்டோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/IiOCxJj

Post a Comment

0 Comments