சமீபத்திய மக்களவைத் தேர்தல்களை கொறுத்தவரையில் கடந்த 2004-ம் ஆண்டு 417 இடங்கள், 2009 -ம் ஆண்டு 440 இடங்கள், 2014-ம் ஆண்டு 464 இடங்கள், 2019- ம் ஆண்டு 421 இடங்களில் காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்டது. இதில் முறையே 145, 206, 44, 52 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி விழுந்தது. குறிப்பாக பாஜகவுடன் நேரடியாக மோதிய பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில்தான் 2024ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் மீண்டும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில் ஏற்கெனவே செய்த தவறுகளை மீண்டும் செய்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் கூட்டணி கட்சிகள் பலமாக இருக்கும் இடங்களில் அவர்களுக்கு அதிக இடங்களை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் கேரளா போன்று பலம் அதிகம் கொண்ட இடங்களில் கூட்டணியில் இருந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் களம் காண்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின், முடிவெடுத்து கொள்ளலாம் என்பது அவரிகளின் திட்டம். எனினும் இந்தமுறை காங்கிரஸ் 300 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சி இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 278 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வரும் நாட்களில் குறைந்தது 20 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ஹரியானா, பீகார், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உ.பி. மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடங்கும். குறிப்பாக காங்கிரஸின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
முன்னதாக கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே, "காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதப்படும் 255 இடங்களில் கவனம் செலுத்தப்படும்" என்றார். அப்போதே இந்தமுறை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்படுவதும், காங்கிரஸ் குறைவான இடங்களில் களம் காண்பதும் உறுதியானது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அக்கட்சி ராஜஸ்தானில் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி, மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அதில் பெரும் பகுதியை வெல்ல வேண்டும் என்பதே அவர்கள் கணக்காக இருக்கிறது. அதற்காக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு அக்கட்சி சார்பில் அதிக கவனமும் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "குஜராத், மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு என பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கியிருக்கிறது. எனவேதான் அவர்கள் நேரடியாக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் நேரடியாக போட்டியிடும் இடங்களில் 150-க்கும் அதிகமான தொகுதிகளை பிடிக்க வேண்டும். நிச்சயம் கைப்பற்றுவோம் என்றுதான் அவர்களும் நினைக்கிறார்கள். அதற்கு வட மாநிலங்களில் மோடிக்கு எதிரான அதிருப்தி நாள்தோறும் அதிகரித்து வருவதுதான் காரணம் என்றும் கணக்கிடுகிறார்கள். மேலும் மிகவும் சரியான முறையில் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ்.
எனவே மோடி அலை தீவிரமாக இருக்காது. வேலை வாய்ப்பு இல்லாதது பாஜகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் ராகுல், ப்ரியங்கா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் கூட்டம் வருகிறது. அதையெல்லாம் பார்க்கும் போது காங்கிரஸூக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் பாஜக வெற்றி பெரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால் அவற்றில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/jRXIz3r
0 Comments