ஒன் பை டூ

பொள்ளாச்சி சித்திக், செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க

“மோடியின் புதிய வடை இது. கொரோனா காலத்தில் `பிஎம் கேர்ஸ் ஃபண்ட்’ என்ற பெயரில் மக்களிடமே வசூலித்து, அந்தப் பணத்துக்குக் கணக்கு காட்டாத மோசடி அரசுதான் மத்திய பா.ஜ.க அரசு. எதிர்க்கட்சிகள் வென்ற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டி, எம்.எல்.ஏ-க்களை குதிரைப் பேரம் மூலமாக விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்களே... அத்தனை கோடிப் பணம் எங்கிருந்து வந்தது அவர்களுக்கு... மோடி தினசரி அணியும் உடையின் மதிப்பு என்ன தெரியுமா... இந்தியர்கள் எல்லோரும் மோடியின் குடும்பம் என்கிறாரே... குடும்பத்தில் ஒருவர் மட்டும் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டு, குடும்பத்தினரை வறுமையில் வாடவிடுவது நியாயமா... பா.ஜ.க ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பும், அமித் ஷா மகனின் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ‘நண்பர்கள்’ நலனுக்காக நாட்டையே விற்கத் துணிவதும், நாடு நாடாகப் பறப்பதும் சரிதானா... தேர்தல் நிதியாகப் பெற்ற பல்லாயிரம் கோடி யாரிடமிருந்து, எப்படிப் பெறப்பட்டது என்று சொல்லத் துணிச்சலில்லாத மோடி, இதையெல்லாம் கேள்வி கேட்கும் தி.மு.க-வை மிரட்டப் பல யுக்திகளைக் கையாளுகிறார். அவர்களின் உருட்டல், மிரட்டலுக்கு என்றுமே தி.மு.க பயப்படப்போவதில்லை. ஊழல், சுரண்டல், கொள்ளைக்கு மறுபெயர் பா.ஜ.க-தான். பிரதமர் சொல்லும் கட்டுக்கதைகளையெல்லாம் இங்கு யாரும் நம்பத் தயாராக இல்லை.”

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“மக்கள் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவர் களிடமிருந்து அந்தப் பணத்தைக் கைப்பற்றி, மீண்டும் மக்கள் வளர்ச்சித் திட்டங் களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் மிகச் சரியாகவே பேசியிருக்கிறார் பிரதமர். ஊழல் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தமாக தி.மு.க மட்டுமே இருக்க முடியும். விஞ்ஞானரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் தி.மு.க-வினர். இவர்கள் யார் என்பதைத் தோலுரித்துக் காட்ட, ‘தி.மு.க உயர்மட்ட குடும்பத்தினர் 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக’ வெளியான ஆடியோ ஒன்று போதுமே... அது குறித்து மூச்சாவது விட்டார்களா... தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஊழல், சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிக்குவதையும், அதன் காரணமாகப் பதவியை இழப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்... பா.ஜ.க அரசில் ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே... உண்மையிலேயே ஊழல் நடைபெற்றிருந்தால் எதிர்க்கட்சியினர் அப்படியே விட்டிருப்பார்களா என்ன... தி.மு.க-வின் ஊழல் முகத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திவருகிறார். இப்போது பிரதமர் மோடி, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான கிரீன் சிக்னலைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.”

- துரைராஜ் குணசேகரன்ஒன் பை டு



from India News https://ift.tt/tHGb1WS

Post a Comment

0 Comments