மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், பா.ஜ.க-வின் தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை ‘மோடி அரசின் இமாலய ஊழல்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பிரகலா பிரபாகர், ‘தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்’ என்று விமர்சித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உரிய தகவல்களை முதலில் வழங்காமல் எஸ்.பி.ஐ வங்கி இழுத்தடித்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் எஸ்.பி.ஐ வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தகவல்களைத் தரக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அழுத்தம் கொடுக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சூழலில், மத்திய நிதியமைச்சரின் கணவரே தேர்தல் பத்திரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரகலா பிரபாகர் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் படித்தவரான அவர், ஆந்திரா முதல்வரின் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.
தன் மனைவி மத்திய நிதியமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்துவருகிறார். சமீபத்தில் அவர் எழுதி வெளியிட்ட ’The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற தலைப்பிலான நூலில், பா.ஜ.க அரசை பல இடங்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரகலா பிரபாகர், ‘தேர்தல் பத்திரங்கள் விவகாரம், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல். உலகில் மிகப்பெரிய ஊழல் என்பதை மக்கள் அனைவரும் இப்போது புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையால், பா.ஜ.க அரசு, வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் விவகாரம் ஆளும் பா.ஜ.க-வுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரம், இன்னும் தீவிரமடைந்து பூதாகரமாக உருவெடுக்கும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். மத்திய நிதியமைச்சரின் கணவரே இவ்வாறு விமர்சித்திருப்பதால், இந்த விவகாரம் குறித்து மக்களும், அரசியல் ஆர்வலர்களும் இன்னும் சீரியஸாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக கட்சிகளுக்கு யார் யார் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்களை தரவே முடியாது என்று மத்திய பா.ஜ.க அரசு சண்டமாருதம் செய்தது. பெரும் கார்ப்பரேட்களுடன் மோடி அரசு கூட்டணி வைத்திருப்பதால், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வரிச்சலுகையாக அளித்து, வரித் தள்ளுபடி செய்து, அதற்கு கைம்மாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க பணம் பெற்றது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அதனால்தான், ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ளத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ வங்கியின் தலையில் உச்ச நீதிமன்றம் ஓங்கிக் கொட்டிய பிறகுதான், அந்த விவரங்களை எஸ்.பி.ஐ வழங்கியது.
பரகலா பிரபாகரன் தன் பேட்டியில், ‘தேர்தல் பத்திரங்கள் விவகாரம், பா.ஜ.க., மத்திய அரசு ஆகியவற்றை கடந்து தற்போது பொதுமக்களிடம் அதிவேகமாகச் சென்றடையத் தொடங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் உலகின் மிகப்பெரிய ஊழல் என்பது மக்கள் அனைவருக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. இந்த விவகாரத்தால் பா.ஜ.க அரசு மிகப்பெரிய தண்டனையைப் பெறும் என்று நினைக்கிறேன்’ என்று மிகவும் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
பரகலா பிரபாகர் எழுதிய ’The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis’ என்ற நூல் வெளியான நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கு பேரழிவாக இருக்கும் என்று நிதியமைச்சரின் கணவரே சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்.
தற்போது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், ‘வரலாறு காணாத ஊழலை செய்துவிட்டு, அதை மூடிமறைப்பதற்கு அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ ஆகியவற்றை கூட்டணியாக பா.ஜ.க சேர்த்துக்கொண்டிருக்கிறது’ என்று விமர்சித்தார். மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று மத்திய நிதியமைச்சரின் கணவர் கூறியிருக்கிறார்’ என்று சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
நேர்மையான கட்சி, வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த கட்சி, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருக்கிறது. எனவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/h9D6uJl
0 Comments