இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் திருச்சி சிறுகனூரில், 'தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்!' என்ற மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேற்று மாலை தொடங்கிய இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனர் தேவநாதன், புதிய நீதி கட்சி சண்முகம், காமராசர் மக்கள் கட்சி தமிழருவி மணியன், பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் எம்.பி. பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் இந்தியா ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் பேசும்போது,
"முயல் மற்றும் நாய்களை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குமாறு மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மத்திய அரசு அதனை வனவிலங்கு பட்டியலில் இருந்து நாய், முயலை நீக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 50 லட்சம் காட்டுநாயக்கர் சமூகத்திற்கு இது மகிழ்ச்சியான செய்தி. வேட்டி கட்டிய தமிழன் இந்தியாவை ஆள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உள்ளது.
அண்ணாமலை மூலமாக நிறைவேற உள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்த மோடி பிரதமராக உயர்ந்தார். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பது உறுதி. எங்கு சென்றாலும், திருக்குறளையும், நாலடியாரையும் மோடி பெருமைபட பேசுகிறார். எனவே, மோடியின் முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என எண்ணுகிறேன். மோடி பிரதமர் ஆவார் என்பதை 6 மாதத்திற்கு முன்பே அவரிடம் தெரிவித்தேன். தமிழக முதல்வரும், அவரின் சகாக்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது எனக்கு மன வேதனையை தருகிறது. ஊழல் கொரோனாவை விட கொடியது. எனவே, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்கள் ஜனநாயகத்தையே வேரறுத்து விடுகிறார்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஐ.ஜே.கே-வின் கொள்கை" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, காமராசர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன்,
"ஒன்றிய அரசு எனக் கூறும் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள். தமிழ்நாடு ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. சேர, சோழ, பாண்டியர், சிற்றரசு என பிரிந்து கிடந்தது. ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது. எனவே, தமிழ்நாட்டை மாவட்ட ஒன்றிய அரசு என கூறினால் முதல்வர் ஏற்றுக் கொள்வாரா?. தமிழ் மண்ணை நேசிக்கும் எண்ணம் அவர்களுக்கு கிடையாது. கடந்த 1947 - ல் தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர் ரூ. 47 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். கடைசியாக 122 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த 122 கோடி நிதிநிலை அறிக்கையில் தான் அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், அனல் மின்சாரம் என தமிழகத்தை வளர்ச்சி பாதைக்குச் கொண்டு சென்ற சிறந்த மனிதர் காமராஜர். ஆனால், இன்று 48 ஆயிரம் கோடி பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் சுமை தற்போது 9 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் 3 லட்சத்து 75 ஆயிரம் கடனாக உள்ளது. எனவே, பொதுமக்கள் எங்கே செல்கிறது தமிழகம் என சிந்தித்து பார்க்க வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து, இறுதியாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,
"நமது தாய் மொழியான தமிழ் மூத்த மொழியாக, உலகத்தின் தொன்மையான மொழியாக இருந்தாலும் கூட தமிழ் கலாசாரத்தை இன்னும் முழுமையாக நாம் பார்க்கவில்லை. அதற்கு இங்கு இருக்கக்கூடிய அரசியல் அனுமதிக்கவில்லை. அதை காண்பிப்பதற்கும் அரசியல்வாதிகள் தயாராக இல்லை. தொன்மையான தமிழ் மொழியை பாதுகாக்க நரேந்திர மோடி தேவைப்படுகிறார். தமிழ் மொழியை கூட்டிலிருந்து விடுவித்து, அதனை ஐநா சபைக்கு எடுத்துச் சென்று உலகம் முழுவதும் பரப்புவதற்கு மோடி தேவைப்படுகிறார். உலகம் முழுவதிலும் தொன்மையான தமிழ் மொழியின் கலாசாரத்தையும், இந்த மண்ணின் தன்மையையும் படம்பிடித்து காட்டுவதற்கும் ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் நீங்கள் எந்த மொழி பேசினாலும் கூட திருக்குறளை கட்டாயமாக படிக்க வேண்டும் என்கிறார் மோடி. மோடி வாழ்க்கையில், அரசாட்சியில் அவருக்கு எழக்கூடிய கேள்விகளுக்கும் கூட திருக்குறள் பதில் அளிக்கிறது என்கிறார் மோடி. ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகட்டும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதாகட்டும், பத்தாண்டு காலமாக நம்முடைய தமிழ் கலாசாரத்தின் மாண்பையும், பெருமையையும் இந்திய மக்களும், உலக மக்களும் காண உள்ளனர்.
வரும் 2026 தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலரும் பொழுது தமிழ் கலாசாரத்தின் தொன்மை புரிந்து கொள்ளப்படும். ஆளும் தி.மு.க அரசு தங்களுடைய 33 மாத கால சாதனையை சொல்லி வாக்கு கேட்பதற்கு தயாராக இல்லை. அவ்வாறு சாதனைகளை கூறாமல் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டு வாக்கில் பேரறிஞர் அண்ணாதுரை வடக்கு, தெற்கு என தான் பேசி வந்த பிஞ்சுப் போன செருப்பை அப்போதே தூக்கி வீசிட்டார். ஆனால், ஸ்டாலினோ, அண்ணாவால் தூக்கி வீசப்பட்ட அந்த பிஞ்சுப் போன செருப்பை எடுத்து போட்டுக் கொண்டு 2024 - ல் மறுபடியும் வடக்கு, தெற்கு என அரசியல் பேசுவதற்கு வந்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளப் போகிறார். இந்த பிஞ்சுப் போன செருப்பு வேலைக்கு ஆகாது. என்று வீசி எறியப்பட்ட செருப்பை மறுபடியும் தி.மு.க அணிந்து கொண்டு 2024 தேர்தல் களத்திற்கு வரும்பொழுது தி.மு.க என்கிற கட்சி இல்லாமல் போகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/V3gvl8s
0 Comments