"வேட்பாளரைத் தேடும் அதிமுக என்று கற்பனையான செய்தியை சிலர் வெளியிட்டு வருகிறார்கள். அதிமுக-வை தொண்டர்கள் பலத்தோடு எடப்பாடி பழனிசாமி வலிமையோடு அழைத்துச்செல்கிறார்..!" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடக மேலாண்மை என்று திமுக கையாளுகின்ற வித்தையில், உண்மையை சில நேரம் உறங்க வைத்துவிட்டு, வதந்திகள் எட்டுக்கால் பாய்ச்சலில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை, ஜெயலலிதா காலத்தில் இந்தியாவின் மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டு இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கி, தொண்டர்களின் ஆதரவோடு, மக்கள் செல்வாக்கோடு, வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி ஒரு சாமானியர் என்பதால் இதுபோன்ற வதந்திகளை தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.
அதிமுக தலைமை கழகத்தில் கிளைக்கழக நிர்வாகிகள் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விண்ணப்பத்தை செலுத்தி வருகிறார்கள். 40 தொகுதிகளில் போட்டியிட 3,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.
ஜெயலலிதா காலத்தில் எப்படி 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விண்ணப்பங்கள் அளிப்பார்களோ, அதே போல் இன்றைக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி நிற்பதுபோல கழகத்தினர் விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள்.
வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும்போது, இந்தியாவே பேசும் வகையில் வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். யாரையோ திருப்திபடுத்த சிலர் அதிமுகவை மட்டம் தட்டி செய்தி வெளியிடுவது தொண்டர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் எடப்பாடியாரை பாராட்ட வேண்டாம், குறைந்தபட்சம் அவர் உழைப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
இன்றைக்கு 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு பூத் கமிட்டிகளிலும் 69 பேர் கொண்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே அதிமுகவை அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி வலுவான கட்டமைப்பை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்
இன்று மாணவர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கவசமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். திமுக-வின் அவலங்களை எல்லாம் நெஞ்சுரத்துடன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் பல்வேறு பிரச்னைகளுக்கு கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறார். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து களம் கண்டு வருவதில் நிச்சயம் வெற்றி பெறுவார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/Xbg2YFk
0 Comments