”டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை” - தஞ்சையில் சாடிய அண்ணாமலை!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து திருவையாறு தேரடியில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கான ஏற்பாட்டை பூண்டி வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தஞ்சாவூரில் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்ததால், அண்ணாமலை பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தாமதமானது.

திருவையாறு பிரசாரத்தில் அண்ணாமலை

இதில் அண்ணாமலை பேசியதாவது, ``மூன்று மணியிலிருந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். தஞ்சாவூர் மாற்றத்திற்காக ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது முறை போட்டியிட்ட பழநிமாணிக்கம் மீண்டும் மேலே மோடி பிரதமராக வரப்போகிறார் என்பதை அறிந்து, போட்டியிடாமல் இந்த இடத்தை விட்டுட்டு கிளம்பி விட்டார்.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சி மன்றத்தில் 400 எம்.பி-க்களுடன் அமர்வார். மோடியின் பார்வை தஞ்சாவூர் பக்கம் திரும்பி இருக்கிறது, பாராளுமன்றத்தின் மையப்பகுதியில் தமிழ் பாரம்பர்ய சின்னமான செங்கோலை நிறுவி இருக்கிறார். நம்முடைய ஆட்சி விவசாயிகளுக்காக நடந்துகொண்டு இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை போலி விவசாயியாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார். எதற்கெடுத்தாலும் தன்னை டெல்டாகாரன் என்கிறார். ஆனால் டெல்டாகாரன் என சொல்வதற்கு அவருக்கு தகுதியில்லை.

அண்ணாமலை

காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் போது மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்து போட்டவர், காவிரியில் மணல் அள்ளுவதை ஊக்குவிப்பவர் டெல்டாகாரரா... காவிரி பிரச்னை தொடர்பான தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டாலும், ஆணையம் அமைக்கப்படவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் 2018ல் அமைக்கப்பட்டது.

கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த வரை காவிரி நீரை யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்லாமல், மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அணை கட்ட அனுமதி கிடையாது என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது. இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை. இந்நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க-வும் ஆட்சியில் இருந்தால், காவிரியில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. இருவரும் பிற்போக்கான ஆட்சி செய்து வருகின்றனர்.

திருவையாறு

பா.ஜ.க-வுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால் இப்பகுதி வலிமைப்படும். காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரஸ், தி.மு.க அதிகாரத்துக்கு வரக் கூடாது. விவசாயிகள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம். அடுத்த தலைமுறைக்கு பெரிய பாவம் செய்கிறோம் என்பதை உணர வேண்டும். இத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் வலிமைமிக்க பாரதம் உருவாகும். நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறோம் அதற்கான வாய்ப்பை தர வேண்டும்.

தி.மு.க 2021 அளித்த தேர்தல் அறிக்கையில் 511 வாக்குறுதியில வெறும் 20 வாக்குறுதியைக்கூட முறையாக நிறைவேற்றாமல் மறுபடியும் அதையே எடுத்து தேர்தலுக்கு வெற்று வாக்குறுதியுடன் நின்றுகொண்டு இருக்கிறது. இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் எத்தனை பேர் உயிர் மடிந்தார்கள், அவர்களுடைய குழந்தைகள் யாராவது தி.மு.க-வில் பொறுப்பில் இருக்கிறார்களா? இல்லை. இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தின் போது தீக்குளித்து யார் இறந்தார்களோ அவருடைய குழந்தைகள் யாராவது எம்.எல்.ஏ, எம்.பியாக இருக்கிறார்களா. அவர்களை வைத்து அரசியல் செய்து உங்களுடைய குழந்தைகள் தான் இன்னைக்கு எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்கள்.

அண்ணாமலை- கருப்பு முருகானந்தம்

தி.மு.க-வுக்கு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது யார் இறந்தார்களோ அவர்களை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையுமே இல்லை. அதனாலதான் பெரியார் அந்த காலத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், பொது சொத்தை தேசப்படுத்திய நான்கு காலிகளை சுட்டிருக்க வேண்டும் என்றார். தி.மு.க மக்களை ஏமாற்றுவதற்காக பேசுவதை யாரும் நம்ப போவதில்லை" என்றார்.



from India News https://ift.tt/436HVfX

Post a Comment

0 Comments