தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடப் போவதாக, மார்ச் 24-ம் தேதி கெங்குவார்பட்டி அருகே உள்ள பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்து அறிவித்தார். அன்றைய தினமே கெங்குவார்பட்டியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியவர் தேனி, போடி, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் மற்றும் சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உடன் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார் டி.டி.வி. முன்னதாக அன்னஞ்சி விலக்கில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் 70 கார்கள், 10-க்கும் மேற்பட்ட டூவீலர்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு தேனி கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தார்.
கலெக்டர் அலுவலகம் அருகே 100 மீட்டருக்கு அப்பால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் கட்சியினர், அமைப்பினர் நிறுத்தப்பட்டு 5 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரசார வேனில் வந்த டி.டி.வி.தினகரன் தன்னுடன் அதிகமான வாகனங்களில் வந்திருந்தோருடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் பேரிகார்டுகளை மீறி நுழைய முயன்றார். அப்போது போலீஸார் வேட்பாளருடன் 3 வாகனங்கள், 5 பேருக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியும், டி.டி.வி.தினகரன் தரப்பினர் கேட்காததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது டி.டி.வி.தினகரனின் வேன், போலீஸாரையும் மீறி உள்ளே சென்றது.
இதனால் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சி நிர்வாகி ராம்பிரசாத் ஆகியோர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
from India News https://ift.tt/GyQ3ItB
0 Comments