திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,
"தி.மு.க-வில் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருந்தது திருச்சிதான். திருச்சி பாதை எப்பொழுதும் வெற்றி பாதை. 2021-ம் ஆண்டு விடியலுக்கான முழக்கம் என திருச்சியில் கூட்டம் அமைத்தோம். அதன் பின் மகத்தான வெற்றி பெற்றோம். இந்த தேர்தல் பாசிச பா.ஜ.க-வை விழ்த்துவதற்காக நடைபெறுகிற தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அதனால், அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லையென்றால் அவர் வெளிநாட்டில் தான் இருப்பார்.
'பா.ஜ.க-வை பார்த்து தி.மு.க-வினருக்கு தூக்கம் வரவில்லை' என்கிறார் மோடி. ஆனால், தன் ஆட்சி முடிய போகிறது என்பதால் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை. அவரின் தோல்வி பயம் அவரின் முகத்திலும், கண்களிலும் தெரிகிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக மோடி என்ன செய்தார் என கேட்டால், இதுவரை மோடியிடம் பதில் இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், மக்களுடன் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எல்லா குடும்பத்திற்கும் பார்த்து பார்த்து குடும்பத்தில் ஒருவனாக திட்டங்களை திட்டி தருபவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தாங்க முடியாத நிதி நெருக்கடியிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
ஆனால், மோடி தமிழ்நாட்டிற்காக எதுவும் செய்யவில்லை. மோடி தன் ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்க தேவையில்லாததை பேசி திசை திருப்புகிறார். இனி, உங்களின் கபட நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களே நம்ப மாட்டார்கள். தற்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தலைப்பு செய்தியாக நாம் சொல்வதென்றால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் விலக்கு, ஜி.எஸ்.டி சீர்திருத்தம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்படும் உள்ளிட்டவை அமைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரெயில்வே பணிமனையை ரெயில் பெட்டி தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை, பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட சாலை, அணுகு சாலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளோம். மோடியால் அவரின் சாதனைகளை கூற முடியவில்லை. பத்தாண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி என்கிறார்.
ஆனால், பல ஊழல்களை அவர் செய்துள்ளார். அவர்கள் செய்த ஊழலில் இமாலய எடுத்துக்காட்டு தான் தேர்தல் பத்திர ஊழல். வருமான வரி துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை கைப்பாவையாக பயன்படுத்தி ரெய்டுக்கு அனுப்பி, அதன் பின் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளார்கள். பாரத் மாலா திட்ட ஊழல், சுங்கச்சாவடி ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல் என ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பா.ஜ.க-வின் தோல்வி பயம் தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட காரணம். இது அப்பட்டமாக பழி வாங்கும் நடவடிக்கை தான். மக்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று திரண்டு விட்டார்கள் என தெரிந்து தோல்வி பயத்தால் இது போன்று செய்கிறார்கள். ஆளுநரை வைத்து தொந்தரவு செய்கிறார்கள்.
தமிழ்நாடு ஆளுநர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்றார். நாம் விடுவோமா?. நாம் உச்ச நீதிமன்றம் சென்றோம். அவர்கள் கண்டித்த பின் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றம் இது போன்று எந்த ஆளுநரையும் கண்டித்ததில்லை. ராஜ் பவனிலிருந்து தேர்தல் வேலை தொடங்குகிறேன் என இன்று ஆளுநரிடம் கூறினேன். அவர் 'பெஸ்ட் ஆஃப் லக்' என்றார். ராஜ்பவனில் தொடங்கிய தேர்தல் பயணம் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லும். வரும் தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க-விற்கான தேர்தல் அல்ல.. இது மக்களுக்கும், பாசிசத்திற்குமான யுத்தம். இதில் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் மோடிக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு.
தமிழுக்கு எதிராக செயல்பட்டு தமிழ் தான் மூத்த மொழி என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அவரின் வெறுப்பு தீயின் விளைவாக பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மத்திய அமைச்சர் ஒருவர் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிகிறார். தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். பாசிச பா.ஜ.க மக்களிடமிருந்து சுரண்டுமே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என நிர்மலா சீதாராமன் ஆணவமாக பேசிகிறார். மக்களுக்கு தருவது பிச்சை அல்ல.. அது அவர்களின் உரிமை.. ஆளும் அரசின் கடமை.
கார்ப்பரேட் கூட்டத்தில் இவ்வாறு பேசுவார்களா?. மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்காக நிதி அமைச்சர் பதவி?. இந்த ஆணவம் தான் பா.ஜ.க-வை வீழ்த்த போகிறது. பா.ஜ.க-விற்கு எதிராக பழனிசாமி எதுவும் பேசவில்லை. பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நீண்ட பட்டியல் போடலாம். ஊழல் செய்து அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க வின் பாதம் தாங்கியாக இருந்தார். தற்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என கள்ளக் கூட்டணி நாடகம் போடுகிறார். விரைவில் அவர்களின் கள்ளக் கூட்டணி முடிவிற்கு வரும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/fy3kiAG
0 Comments