“சி.ஏ.ஏ சட்டத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து? - ஒன் பை டூ

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``பழனிசாமி ஒரு பச்சோந்தி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். சிறுபான்மையின மக்கள் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தபோது, அவர்களைக் கைதுசெய்தது அ.தி.மு.க அரசு. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டம் நிறைவேற முழு ஆதரவு கொடுத்தார்கள் அ.தி.மு.க எம்.பி-க்கள். தனது ஆட்சியைக் காப்பாற்றவும், அ.தி.மு.க ஊழல் அமைச்சர்கள்மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் பா.ஜ.க சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார் பழனிசாமி. தி.மு.க எம்.பி திருச்சி சிவா, `சி.ஏ.ஏ சட்டத்தில் இலங்கை மக்களை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தபோது, அ.தி.மு.க எம்.பி-க்கள் அதை முற்றிலுமாக எதிர்த்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க செய்த துரோகத்தை ஒருபோதும் அந்த மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். சி.ஏ.ஏ-வின் ஆபத்துகள் குறித்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க சட்டமன்றத்தில் பேசியபோதும், ‘அவதூறு பரப்புகிறோம்’ என்று சொல்லி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார் பழனிசாமி. செய்வதையெல்லாம் செய்து கொடுத்துவிட்டு, இப்போது தேர்தல் நெருங்கியதும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளுக்காகப் பொய் வேடம் போடுகிறார். பழனிசாமியின் துரோகங்களைச் சிறுபான்மையின மக்கள் மறக்கவும் மாட்டார்கள்... எந்தக் காலத்திலும் அவரை மன்னிக்கவும் மாட்டார்கள்.’’

சிவ.ஜெயராஜ், கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``உண்மையைத்தானே சொல்கிறார்... அந்தச் சமயத்தில் எங்கள் ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததை நாங்கள் மறுக்கவில்லை. மத்திய பா.ஜ.க அரசு சி.ஏ.ஏ சட்டத்தைக் கொண்டுவந்த சமயத்தில், `இது வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்போகும் சட்டம்’ என்றுதான் சொன்னார்கள். அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதே, `தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு சிறுபான்மை மக்களுக்கும் சிறு பாதிப்பும் ஏற்படாது’ என்று எடப்பாடியர் தெளிவாகச் சொன்னார். ஆனால், இன்றுவரை அந்தச் சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களிடையே இருக்கும் அச்சத்தை மத்திய அரசால் போக்க முடியவில்லை. அதனால், சி.ஏ.ஏ சட்டத்தை நாங்களும் எதிர்க்கிறோம். அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், சி.ஏ.ஏ சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், அ.தி.மு.க மட்டுமே சி.ஏ.ஏ அமலுக்கு வரக் காரணம் என்பதுபோலப் பொய்ப் பரப்புரை செய்கிறது தி.மு.க. உண்மை என்ன தெரியுமா... 2021 தேர்தல் சமயத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும்போதே, `சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்’ என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது அ.தி.மு.க. இப்போது எங்கள் முடிவை வெளிப்படையாக முன்வைக்கும்போது, தி.மு.க ஏன் பதற்றமடைய வேண்டும்... எங்கே சிறுபான்மையின வாக்குவங்கி அ.தி.மு.க பக்கம் சாய்ந்துவிடுமோ என்கிற அச்சம்தான் இதற்கெல்லாம் காரணம். வேறொன்றுமில்லை!”



from India News https://ift.tt/Q78gKci

Post a Comment

0 Comments