ஜம்மு: `மக்களவைத் தேர்தல் நடத்தும்போது ஏன் சட்டமன்றத் தேர்தல் நடத்தமுடியவில்லை?' - ஃபரூக் அப்துல்லா

2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, அதே ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைக் கலைத்து, சிறப்பு அந்தஸ்தளிக்கும் அரசியலமைப்புப் பிரிவு 370-ஐ நீக்கியது. அதோடு, மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு பிரித்து. அதன் பிறகு 2024 மக்களவைத் தேர்தலும் தற்போது வந்துவிட்டது. ஆனால், இன்னும் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை. அங்கிருக்கும் மாநில கட்சிகளும், சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

ஜம்மு - காஷ்மீர்

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலோடு ஜம்மு காஷ்மீரிலும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று மாநில கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், நேற்று மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பின்போது, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏன் சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியவில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, ``இங்கு மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இருக்கும்போது, சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு மட்டும் எப்படி இல்லாமலிருக்கும். இதில் ஏதோ இருக்கிறது... சட்டமன்றத் தேர்தல் மீண்டும் தாமதமாவது வருத்தமளிக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் துணை நிலை ஆளுநருடன் செல்வது... மக்களின் இதயங்களை நீங்கள் வெல்ல விரும்பினால், அதற்கான தொடக்கம் இதுவே.

ஃபரூக் அப்துல்லா

நான்கு மாநிலங்கள் இந்த மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தங்கள் சொந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள்... ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும்நிலையில், இதுவும் அதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால், இவ்வாறு செய்ததன் மூலம், இங்கு வெற்றி பெறுவது குறித்து அவர்களுக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களால் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.



from India News https://ift.tt/CLw6uHb

Post a Comment

0 Comments