பிரதமரின் தமிழ் மொழி குறித்த பேச்சுகள் அக்கறையா, அரசியலா? - ஒன் பை டூ

மனுஷ்ய புத்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர், தி.மு.க

``மோடியின் தேசபக்தி எவ்வளவு போலியானதோ, அதைவிடப் போலியானது அவரது தமிழ்ப்பற்று. இங்கு மட்டுமல்ல, எந்த மாநிலத்துக்குப் போனாலும் அந்த மாநிலத்தின் மொழி, பண்பாட்டைப் புகழ்ந்து நான்கு வார்த்தை பேசினால், அந்த மக்கள் அதில் கிளுகிளுப்படைந்து தன்னை ஆதரித்துவிடுவார்கள் என்று நம்புகிறார். போகிற இடமெல்லாம் சில திருக்குறள் வரிகளையும், பாரதியார் பாட்டுகளையும் சொல்லிவிட்டால், அது தமிழுக்குச் செய்த உபகாரமாகிவிடுமா... உலகெங்கும் பத்து கோடிப் பேர் பேசும் தமிழ்மொழியை ஆராய்ச்சி செய்யும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் 74.1 கோடி. ஆனால், யாருமே பேசாத சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய பணம் 1,487.9 கோடி. காசியில் நடந்த தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியும்கூட சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியாகவே நடைபெற்றது. மாநிலத்தில் இயங்கிவரும் வங்கிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி தொடர்ந்து மூர்க்கமாகத் திணிக்கப்பட்டுவருகிறது. மோடியின் தமிழ்ப்பற்று ஒரு கபட நாடகம். அந்த நாடகத்தை அவர் கூச்சமின்றி பல வருடங்களாக ஆடிவருகிறார். மாநிலத்துக்கு மாநிலம் மோடி நடத்தும் இந்த மாறுவேடப் போட்டிக்கு, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.’’

மனுஷ்ய புத்திரன், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

``பிரதமர் அக்கறையோடு பேசுவதை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகிறார்கள். இன்று நேற்றல்ல, எப்போதுமே. பிரதமர் செல்லும் எல்லா மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர்கள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும், தமிழ் மொழியின் பெருமை குறித்தும் பேசத் தவறியது இல்லை அவர். காரணம், பிரதமர் தமிழ்மீதும், தமிழர்கள்மீதும் கொண்ட தனிப்பட்ட மரியாதைதான். சம்ஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழியாக இல்லை. அந்த மொழிக்கு அதிக பணம் ஒதுக்குவதில் என்ன தவறு இருக்கிறது... அதேபோல, இவ்வளவு வாய் பேசும் தமிழகத்திலுள்ள மாநிலக் கட்சிகள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கிய பணம் எவ்வளவு... தமிழ் மொழியின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக எதையுமே செய்யாத இவர்கள், எங்களைக் குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது... பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக காசி தமிழ்ச் சங்கமம் நடத்துகிறது. குஜராத்தில் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நடத்துகிறது. தமிழரின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியது. தமிழ் இலக்கியத்தின் பெருமையை, திருவள்ளுவர், வள்ளலார் பெருமைகளை உலகெங்கும் எடுத்துச் சொல்கிறார் பிரதமர். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல், காழ்ப்புணர்ச்சியில் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது!’’



from India News https://ift.tt/eEuZI5K

Post a Comment

0 Comments