'கடந்த முறை கோ பேக் மோடி... இந்த முறை கெட் அவுட் மோடி' - திமுக ஐ.டி விங்குக்கு உதயநிதி அட்வைஸ்!

திமுக சார்பில் சமூ கவலைதள தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " கோவையில் சமூக வலைதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையைச் சேர்ந்த அதிமுக காரர் ஒருவரை தொடர்ந்து  பதற்றத்திலேயே வைத்துள்ளீர்கள். பல விசயங்களை கொண்டு செல்வது நீங்கள் தான். சமூக வலைதளங்களால் சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட நடந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு  மோடியை ஜல்லிக்கட்டு மூலம் சமூக வலைதளம் ஆட்டம் காண வைத்தது. 2021ம் ஆண்டு அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினோம். இந்த முறை அடிமைகளின் எஜமானார்களை வீட்டுக்கு அனுப்புவோம். புயல் வந்தால் கூட தமிழ்நாட்டு பக்கம் தலை வைக்காதவர்கள், தேர்தல் வந்தால் வாரத்துக்கு இரண்டு முறை வருவார்கள். பாஜக-வினர முழுக்க முழுக்க பொய்களை மட்டும் நம்பி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவியவர், அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்று சொல்லியுள்ளார்.  ஜெயலலிதா ஊழல் செய்து ஒரு முறை அல்ல பல முறை சிறை சென்றவர் என்று பிரதமருக்கு தெரியாதா. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மலர் தூவி, ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஒரே பிரதமர் மோடி தான். இவருடைய 10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவோ ஊழல்கள் நடந்துள்ளன. கன்ட்ரோலர் ஆஃப் இந்தியா ஒன்றிய மாநில அரசுகளின் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும். அதில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை.

திமுக கூட்டம்

ஒரு கிலோ மீட்டர் சாலை போட ரூ.268 கோடி கணக்கு காட்டியுள்ளனர். திமுகவை ஒழிப்பதாக கூறியவர்கள் காணாமல் போய் உள்ளனர். 1949ம் ஆண்டிலிருந்து இந்த டயலாக் பேசியவர்கள் அழிந்து விட்டனர். திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. கூவத்தூரில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். பழனிசாமிக்கு இன்னொரு செல்ல பெயர் உண்டு.  'பாதம் தாங்கி பழனிசாமி'. மண்டியிட்டு முதல்வரானேன் என்று அவரே கூறியுள்ளார்.

கூவத்தூரைப்போல,  கோவையில் சர்ப்ரைஸ் என்று அதிமுகவினரை தூக்கியதாக பாஜகவினரும், பாஜகவினரை தூக்கியதாக அதிமுகவினரும் கூறியுள்ளனர். உண்மையில், பாஜகவின் மாநில டீம் அதிமுக. அதிமுகவின் தேசிய டீம் பாஜக. அதிமுக ஆட்சியில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது திமுக. ஆனால் அதிமுக வாயைவே திறக்க வில்லை. இப்போது, ஆளுநரின் நடவடிக்கைக்கும் வாய் திறக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் இதுவரை 454 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இவையெல்லாம் பார்த்து மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளனர். இதுதான் திராவிட மாடல். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே உடை , ஒரே கட்சி என்று வந்து விடும் இணையதளம் கூட இருக்காது. கடந்த தேர்தலில், 'கோ பேக் மோடி' ட்ரெண்டிங் ஆனதை போல, இந்த முறை 'கெட் அவுட் மோடி' என்பதை ட்ரெண்ட் செய்ய வேண்டும்." என்றார்.



from India News https://ift.tt/NaHWhuc

Post a Comment

0 Comments