"நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-வுடன் கூட்டணி இல்லை" - எடப்பாடி பழனிசாமி

எஸ்.டி.பி.ஐ மதுரையில் நடத்திய  மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

மாநாட்டு மேடைக்கு திறந்த வாகனத்தில் வந்த எடப்பாடி  பழனிசாமிக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "எஸ்.டி.பி.ஐ மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது தெரிகிறது. தி.மு.க கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். நான் முதலமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை, நான்  தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானேன் என்று என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பென்றால் என்னவென்று தெரியாது, நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச் செயலாளரிலிருந்து பொதுச்செயலாளராகவும்,  முதலமைச்சராகவும் வந்தேன். ஆனால், மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் வந்துள்ளார். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

மதுரை ராசியான மண், தொட்டது துலங்கும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநாடும் வெற்றி பெறும். அ.தி.மு.க சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ மாநாடு

தி.மு.க எங்களைப் பார்த்து அடிமை என கூறுகிறது, நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. நாங்களும் யாரையும் அடிமைப்படுத்தவில்லை, அ.தி.மு.க சுதந்திரமான கட்சி. சாதாரண தொண்டன்கூட உயரிய பதவிக்கு வர முடியும். மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டுமென தி.மு.க ஒரு கூட்டணி அமைத்துள்ளது, மக்களை பற்றி கவலைப்படவில்லை, குடும்பத்தினருக்காக கூட்டணி வைத்துள்ளது.

கடந்த காலங்களில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது, தொழில் முதலீட்டு மாநாடுகள் வாயிலாக எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், தி.மு.க கொள்ளை அடிப்பதற்காக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.டி.பி.ஐ-யினரின் வரவேற்பு

1996-லிருந்து தி.மு.க மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு, அ.தி.மு.க ஒரு நாளும் கொள்கைகளை விட்டு கொடுக்காது.

நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

நாலரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அ.தி.மு.க-வில் வைத்துக் கொண்டு நான்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்கு அளித்தபோதும் ஆட்சி நிலைத்து நின்றது, எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போல அ.தி.மு.க-வுடன் நிறைய கட்சிகள் வர உள்ளன, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/av3D8Ez

Post a Comment

0 Comments