திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகரதிருமாளம் ஊராட்சி. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஊராட்சியில் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு பல ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்ட போது, `அரசாங்கத்திடமிருந்து உரிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. நிதி வந்தவுடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என்று கூறி உள்ளார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கிராமத்தில் சாலை போடப்பட்டதாக தகவல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த வினோத் என்கிற இளைஞர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தங்களுடைய ஊராட்சிக்கு 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் என்னென்ன பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலினை கேட்டுள்ளார். மாநில தகவல் ஆணையம் தந்த பதில் மனுவில், அகர திருமாளம் ஊராட்சியில் கிராமத்தின் பல தெருக்களில் தார் சாலை போடப்பட்டதாகவும், குளங்கள் தூர்வாரப்பட்டுதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதற்கு மத்திய அரசின் பொதுநிதியில் இருந்து பல லட்சம் பணம் செலவிட பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த ஊராட்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பல பகுதிகளில் சாலை என்பது அமைக்கப்படாமல் இருப்பதாக ஊர் மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.39 லட்சம் வரை அரசினுடைய பொது நிதியிலிருந்து பணம் ஊழல் செய்து ஊராட்சிக்கு சாலை போடாமலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தமிழக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே "சாலையை காணவில்லை" என்று போஸ்டர் அடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உட்பட திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒட்டியதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.
மேலும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஊழல் செய்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பால்வண்ணன் துணைத் தலைவர் ராஜசேகரன் மீதும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் பெற்ற வினோத் நம்மோடு பேசுகையில்,``திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது எங்களுடைய அகர திருமாளம் ஊராட்சி. பல ஆண்டுகளுக்கு மேலாக, எங்களது ஊராட்சிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படாமல் இருந்து வந்தது.
அத்தியாவசிய தேவைக்கு பயன்படக்கூடிய சாலை மின்விளக்குகள் கூட சரியாக எரியாது. ஊர் மக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று கேட்டபோது நமது ஊராட்சிக்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது, நிதி ஒதுக்கப்பட்டவுடன் சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் என்று கூறினார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக எங்களது ஊராட்சியின் சிவன் கோயில் தெரு என்கிற பகுதியில் தார் சாலை போடப்படாமலேயே சாலை போடப்பட்டதாக கூறி 14 லட்சம் மதிப்பீட்டில் தகவல் பலகை ஒன்று வைக்கப்பட்டது. எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால், எங்களுடைய அகர திருமாளம் ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு போட்டேன்.
தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எங்கள் ஊராட்சிக்கு விளையாட்டு மைதானம் அமைத்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுவரை எங்களது கிராமத்தில் விளையாட்டு மைதானம் என்ற ஒன்றே கிடையாது. கிட்டத்தட்ட முறைகேடாக 39 லட்சம் ரூபாய் வரை அரசாங்கத்தினுடைய நிதி பணம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவராலும், கிராம அரசு அதிகாரிகள் மூலமாகவும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே "சாலையை காணவில்லை" என்று போஸ்டர் அடித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் எங்களது கிராம மக்கள் சார்பாக ஒட்டி உள்ளோம்.
இந்த போஸ்டர் ஒட்டியதற்காக காவல் துறையை வைத்தும், அரசு உயர் அதிகாரிகளை வைத்தும் என்னை மிரட்டுகிற வகையிலும் பேசி வருகின்றனர். அகரதிருமளம் ஊராட்சி பொதுத் தொகுதியாக இருந்த போது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வின் ஊராட்சி மன்ற தலைவராக ராஜசேகரன் என்பவர் இருந்தார். ஆனால் இப்போது (தனி)ஊராட்சி ஆனதால், பால்வண்ணன் என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபரை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற வைத்த விட்டு, அவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கொடுத்து வருகிறார். மேலும், எங்களது கிராமத்தில் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிற சாலை வசதி, சுடுகாடு வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்பட வேண்டும். மேலும் அரசின் பொது நிதியிலிருந்து பணத்தை முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் மீதும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எங்களது அகர திருமாளம் கிராம மக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.
இந்த பிரச்சனை தொடர்பாக அகர திருமாளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகரன் அவர்களிடம் பேசிய போது... ``சாலை போடுவதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாலை போடுவதற்கான மூலப்பொருட்களான தார், ஜெல்லி கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது . கூடிய விரைவில் சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் பொது நிதியில் இருந்து பணம் எடுத்து ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இப்போது உள்ள காலகட்டத்தில் அரசாங்கத்தினுடைய நிதியை அவ்வளவு எளிதில் யாரும் எடுத்து விட முடியாது” என முடித்துக்கொண்டார்!
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/ABWi5H8
0 Comments