ராமர் கோயில்: ``சிறப்பு பூஜையை தடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்!" - அண்ணாமலை

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு தடை உத்தரவு போட்டிருப்பதாக நாளிதழ் செய்தியைக் குறிப்பிட்டு, திமுக அரசு செய்வது இந்து விரோத செயல் என கண்டனம் தெரிவித்தார்.

சேகர் பாபு - நிர்மலா சீதாராமன்

பின்னர் உடனடியாக, மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ``தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தி.மு.க அரசுக்கு ஆணவம் அதிகம் ஆகிவிட்டதாகவும், மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``அமைதியான முறையில் கோயிலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் தி.மு.க கை வைப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதியெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் என்ன நிறுத்துகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். எல்லா கோயில்களிலும் பூஜை செய்யுங்கள் மக்களுக்குத் திருப்தியாக சாப்பாடு போடுங்கள் என்று பா.ஜ.க நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறோம்.

அண்ணாமலை

யார் தடுக்கிறார்கள் என்று நாளை பார்த்துக் கொள்ளலாம். இதைத் தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். உங்களுடைய (முதல்வர் ஸ்டாலின்) மகன் நடத்துகின்ற விழாவுக்குத் தமிழ்நாட்டின் பேருந்துகளை எல்லாம் திருப்புகிறீர்கள். தங்கை கொடியேற்றுகிறார், மகன் நிகழ்வு நடத்துகிறார், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு குடும்ப விழா போல தி.மு.க-வின் இளைஞரணி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தமிழக அரசு அனுமதி கொடுக்கும்... ஆனால், கோயிலுக்குள் நடக்கிற நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என இவர்கள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கும் இந்த அரசு இதே மாதிரி அறிக்கை கொடுக்குமா...

அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின்

எங்களின் தொண்டர்கள் அனைவரிடத்திலும் தடையை மீறி இறங்குங்கள் என்று சொல்லி இருக்கிறோம். எல்லாம் ஓரளவுக்குதான் பொறுக்க முடியும். ஒழுக்கமாக நடந்து கொண்டால் தான் அரசுக்கு மரியாதை. அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அரசுக்கு மரியாதை கிடையாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த அரசுக்கு ஆணவம் அதிகம் ஆகிவிட்டது. மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். இனி இந்த அரசு மீது மரியாதை இல்லை. பாஜகவின் இந்த தொண்டனும் நாளை அரசை மதிக்கப் போவது கிடையாது" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/eF3VGIX

Post a Comment

0 Comments