சாத்தூரில் தனியார் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், "மாணவர்களுக்கு கல்வி முக்கியமானது. கல்வியை பேரியக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும். அது வியாபாரத்துக்கான பொருள் அல்ல. இந்தியாவில் 58 சதவீத மாணவர்கள் கிராமப்புறத்தை சார்ந்தவர்கள் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நான் மத்திய அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மந்திரியாக பணியாற்றியிருந்த சமயத்தில் கிராமப்புறங்களுக்கு சாலை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட முடிந்தது.
ஒரு கிராமத்திற்கு வளர்ச்சித் திட்டங்கள் வர வேண்டுமெனில் முதலில் சாலை சரியாக இருக்க வேண்டும். சாலை வசதி இல்லையெனில் கவுன்சிலர் முதல் கலெக்டர், மந்திரி வரைக்கும் யாரும் வரமாட்டார்கள். சாலை வசதி மட்டும் சரியாக அமைந்து விட்டால் கல்விக்கூடங்களும் கிராமப்புறங்களை சென்றடையும் வகையில் அமைப்புகளை ஏற்படுத்திட முடியும்.
அதுபோல படித்து முடித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன் உதாரணமாக விளங்க வேண்டும். முதலில், நாம் சில முக்கிய விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். முதலில் தாய்-தந்தையை எந்த நிலையிலும் நாம் மறக்கக்கூடாது. இரண்டாவது சொந்த ஊர். சொந்த ஊருக்கு நாம் செய்யும் சின்ன உதவி கூட மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நம்மை சார்ந்த மக்களுக்கு ஏற்படுத்தும்.
மூன்றாவது தாய்மொழி, எந்த ஊருக்கு சென்றாலும், எந்த நிலைக்கு சென்றாலும் ஒருவர் தனது தாய் மொழியை எப்போதும் மறவாது இருக்கவேண்டும்.
மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்காக ஆங்கிலம் பயன்பட வேண்டுமே தவிர, அதுவே தாய்மொழியாகாது. ஆகவே, தாய் மொழியை பேசி பழகுங்கள். அதன் பிறகு பிற சகோதர மொழிகளை கற்றுக் கொள்ளலாம். கல்வி உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் ஆசைகள், கனவுகள் குடும்பத்தின் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலுக்கு உதவும் ஓர் கருவி. வேலை வாய்ப்புக்கு மட்டும் கல்வி பயன்படுவதில்லை. வேலையின்மையை போக்குவதற்கும் சுயசார்பு மனிதர்களாக நாம் உருவாவதற்கும், அறிவை விரிவடையச் செய்து பேரொளி கொண்ட நபராக திகழச் செய்வதற்கும் கல்வி உதவுகிறது.
மாணவர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளவேண்டும். மனிதர்கள் இன்று தனக்கு தேவையான விஷயங்களை திருக்குறளில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். அதுபோல், ஆசிரியர்களே மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆசிரியர்களால் மட்டுமே ஒவ்வொரு மாணவனின் குறிப்பிட்ட திறமையை கொண்டு வர முடியும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வியோடு மட்டுமல்லாமல் நிச்சயமாக ஏதாவது ஒரு விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அது தடகளம், நாட்டியம், பாட்டு, இசை, உடற்பயிற்சி, யோகா என எதைச் சார்ந்து வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் யோகாவை மதம் சார்ந்த விஷயமாக பேசுகிறார்கள். 'யோகா' என்பது மதம் சார்ந்த விஷயம் அல்ல. அது உடல் வலிமையையும், அறிவியலையும் சார்ந்த விஷயம். நாம் அனைவரும் இணைந்து ஆரோக்கியமான அதே சமயம் நல்ல அறிவான சமூகத்தினர் உள்ள நாட்டினை உருவாக்க முடியும். நமது நாடு பலமாக இருக்க வேண்டுமெனில் மற்றவர்களை தாக்க வேண்டும் என்பதல்ல, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையாகவும், அதே சமயம் பிறரின் வளர்ச்சிக்கு உதவும் வல்லமை கொண்ட நாடாகவும், எதையும் முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் தன்மையுடனும் இருந்தாலே போதுமானது.
நமது நாடு கல்வியில் மேம்பட்ட நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே கடந்த 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதை அரசியலுக்கு உள்ளாக்கி சில மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்மையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவுதர வேண்டும்.
சமீப காலமாக 'ராமா' எனும் ஒற்றை வார்த்தை அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. உண்மையில் யார் அந்த 'ராமா' என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ராமசாமி நாயக்கர்(பெரியார்), பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ராமச்சந்திரன், ஆர்.ராமச்சந்திரன், என்.டி.ராமராவ், ராம் விலாஸ் பஸ்வான், ஜெகஜீவன் ராம், சீதாராம் யெச்சூரி, ராமசாமி நாயுடு என எல்லாருமே ராமனை அடையாளப்படுத்துபவர்களே. ஆகவே 'ராமா' என்பது ஒரு மதம் சார்ந்த மனிதர் அல்ல. 'ராமா' என்பவர் இந்திய கலாசாரத்தை கட்டமைத்த மிகச் சிறந்த மனிதர். சிறந்த ஆட்சியாளர்.
இங்கு நாம் அனைவரும் ராமரின் கொள்கைகளான வாக்கு தவறாமை, அன்பு, சகோதரத்துவம், விட்டுக்கொடுத்தல், பொறுமை, நேர்மை, உண்மை என ஒவ்வொரு விஷயங்களையும் கடைபிடிக்க வேண்டும். இதை வைத்து நான் அரசியல் பேசவில்லை. ஏனெனில் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஆனால் நான் இன்னும் சோர்வடையவில்லை. என்னுடைய எண்ணங்களையும், திட்டங்களையும் என்னை சார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கலந்துரையாடுகிறேன். அதில் சிலவை ஏற்றுக் கொள்ளப்படும், சிலவை நிராகரிக்கப்படும். நாம் ஒவ்வொரும் தனிப்பட்ட அடையாளங்களாக உருவாக வேண்டும். ஆகவே எந்த ஒரு விஷயத்தையும் ஆலோசியுங்கள், வாதிடுங்கள், வடிவமையுங்கள். ஆனால், தடை போட்டு, முரண்பட்டு பேசாமல் வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் போதும்.” என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/aFHeCqT
0 Comments