ஒன் பை டூ

மல்லை சி.ஏ.சத்யா, துணைப் பொதுச்செயலாளர் ம.தி.மு.க

“எங்கள் தலைவர் சொன்ன கருத்து முழுக்க முழுக்க உண்மை. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவரும் அனைத்துச் சட்டங்களும் மக்கள் விரோதச் சட்டங்களாகவே இருக்கின்றன. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டம் தொடங்கி, வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என ஒன்றிய பா.ஜ.க கொண்டுவந்த சட்டங்கள் அனைத்துமே ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, பாசிச சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்கின்றன. பருவங்களுக்காகக் காத்திருக்காமல் பூக்கும் ஒரே பூ புரட்சி மட்டும்தான். அந்தப் புரட்சியை முன்னகர்த்த, பெரிய கூட்டம் தேவையில்லை, காரணம் ஒன்று போதும். நடந்த விவசாயப் போராட்டத்திலும், ஷாகின்பாத் போராட்டங்களிலும்கூட இந்த அரசு இன்னும் பாடம் கற்கவில்லை. மக்களுக்காகத்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். சட்டங்களுக்காக மக்கள் என்றால் அது சர்வாதிகாரம். அதைத்தான் இந்த அரசு தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகம் என்பது, நாடாளுமன்ற ஜனநாயகம். அங்குதான் 140 கோடி மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க, மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று விருப்பு வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும். ஆனால், மோடி தலைமையில் நடைபெற்றுவரும் சர்வாதிகார ஆட்சியில், நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பா.ஜ.க-வுக்குப் புரியும் மொழியில் சொல்கிறேன்... திருந்துங்கள். இல்லையென்றால், மக்களின் கோபம் ஆழிப்பேரலையாக எழுந்து உங்களை மொத்தமாகத் தூக்கி எறியும். இது சத்யாவின் வாக்கு அல்ல, சத்தியத்தின் வாக்கு!”

மல்லை சி.ஏ.சத்யா, வினோஜ் பி செல்வம்

வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

“அர்த்தமில்லாத குற்றச்சாட்டு. பாரதத்தின் முன்னேற்றத்துக்கு எந்தச் சட்டம் தேவையோ, மக்களின் நலனுக்கு எந்தச் சட்டம் தேவையோ அந்தச் சட்டங்களையே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய சமயத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதால்தான் இப்போது ஜம்மு-காஷ்மீர் அமைதி பூமியாக மாறியிருக்கிறது. இதே பா.ஜ.க அரசு முத்தலாக் தடையைக் கொண்டுவந்தது. அதற்காக இஸ்லாமியப் பெண்களே பா.ஜ.க அரசுக்கு நன்றி சொன்னதைப் பார்க்க முடிந்தது. அதேபோல, நாங்கள் கொண்டுவந்த விவசாயிகள் சட்டமும் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே. அந்தச் சமயத்தில் விவசாயச் சட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டார்கள். எதிர்ப்பைத் தொடர்ந்து, அதைத் திரும்பப் பெற்றது பா.ஜ.க அரசு. மோடி தலைமையிலான அரசு இயற்றிய பல சட்டங்களைத் தகர்த்தெறிய வேண்டும், தடை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் தொடுத்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தவிடு பொடியானதைப் பார்த்துவருகிறோம். அந்த அளவுக்கு ஜனநாயக முறையில் சட்டங்களை அரசு அமல்படுத்திவருகிறது. நெருக்கடி நிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட விதிகளுடன், தற்போதைய ஜனநாயக ஆட்சியை ஒப்பிட்டுப் பேசுவது அவரின் அறியாமையின் வெளிப்பாடுதான்!”



from India News https://ift.tt/XtV8DcU

Post a Comment

0 Comments