`யார் உண்மையான சிவசேனா?' சபாநாயகர் உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றம் சென்ற உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2022-ம் ஆண்டு தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்று பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தனர். இதையடுத்து பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனாவின் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. கொறடா உத்தரவை மதிக்கவில்லை என்று கூறி ஏக்நாத் ஷிண்டே உட்பட அவரது அணி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுக்கொடுக்கப்பட்டு இருந்தது. இம்மனு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நீண்ட இழுபறிக்கு பிறகு விசாரிக்கப்பட்டது.

ராகுல் நர்வேகர்

கடந்த 10-ம் தேதி சபாநாயகர் ராகுல் நர்வேகர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை உண்மையான சிவசேனா என்று அறிவித்தார். அதோடு கட்சித் தாவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில் அரசியல் அமைப்புச் சட்டம் (91வது திருத்தம்) இருந்தபோதிலும் சபாநாயகர் சட்டவிரோதமாக கட்சித் தாவலுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டி உண்மையான சிவசேனா எது என்பதை சபாநாயகர் தவறாக முடிவு செய்துள்ளார்.

பதவி பறிப்பு வழக்குகளில் சட்டமன்றத்தில் எந்தக்குழு பெரும்பான்மை பெற்றுள்ளது என்பதை பார்த்து கண்மூடித்தனமாக சபாநாயகர்கள் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பு சுபாஷ் தேசாய் வழக்கில் கூறியிருந்ததை உத்தவ் தாக்கரே தரப்பில் சுட்டிக்காட்டி இருந்தனர். இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ள போதிலும் சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி சபாநாயகர் உண்மையான சிவசேனா எது என்று முடிவு செய்துள்ளார். சட்டமன்ற கட்சி மற்றும் அரசியல் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை உச்ச நீதிமன்றம் தெளிவாக வகுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

அப்படி இருந்தும் யார் அரசியல் கட்சி என்பதை முடிவு செய்ய சட்டமன்ற பெரும்பான்மையை சபாநாயகர் அளவு கோலாக கருதி தவறு செய்துள்ளார். எனவே சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டு இருந்த மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியின் கொறடா பரத் கோகாவாலா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/iCRNH86

Post a Comment

0 Comments