`பொன்முடி வழக்கில் இதற்கு முன்பு அவரை விடுதலை செய்த நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். இது நடைமுறை சாத்தியமா? நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை:
சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவியை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், ``தி.மு.க அமைச்சர்கள் பலரின் மீது இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதற்கு முன்பாக சிறைக்கு சென்றபோது செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்யாமல் இதுவரை இலாகா இல்லாத அமைச்சராகவே தொடரச் செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இது மிகப்பெரிய அவமானம். இப்போது தொடர்ச்சியாக இன்னொரு அமைச்சரும் தண்டனை பெற்றிருக்கிறார். இதுபோன்ற குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் அனைவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, நம் மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.
மேலும், ``பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த வழக்கை விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு மாற்றினார்கள். அந்த விசாரணைகூட மாவட்ட நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தண்டனை பெறுவது ஒருபுறமிருந்தாலும், இன்னொரு புறம் இவர்களுக்கு உதவுகின்ற நீதித் துறையினர் மீது நடவடிக்கை பாய வேண்டும். முக்கியமாக, பொன்முடி விவகாரத்தில் இந்த வழக்கை நீதிமன்றமே சூமோட்டோவாக விழுப்புரம் கோர்ட்டிலிருந்து வேலூருக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வைத்திருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை நீதிமன்ற அலுவலர்கள், நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
`சாத்தியமே இல்லை! மிகத்தவறான கூற்று' : வழக்கறிஞர் சொல்வது என்ன?
இந்த கோரிக்கை சாத்தியமானதுதானா? நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்புக்கு நீதிபதிகள் நீதித்துறையினருக்கு தண்டனை அளிக்க முடியுமா? என்ற கேள்விகளுடன் மூத்த வழக்கறிஞர் அ.நல்லதுரையிடம் பேசினோம். ``இந்திய நீதித்துறையைப் பொறுத்தவரையில் எல்லா நீதிமன்ற நீதிபதிகளுக்கும் `Judicial immunity' என்ற அம்சம் ஒன்று இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வழக்கில் அந்த நீதிபதிகள் ஆவணங்களை ஆராய்ந்தும், வாய்மொழி சாட்சியங்கள், வழக்கு இன்டர்பிடேஷன், இருதரப்பு விளக்கம் என பல கூறுகளை எடுத்துக்கொண்டு அந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். தீர்ப்பு எழுதுவது என்பது அந்த நீதிபதிகளின் தனிப்பட்ட பார்வைக்கு, அதிகாரத்துக்கு, உரிமைக்கு உட்பட்டது. அந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது. அந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்றால் நிவாரணமாக `மேல்முறையீடு' என்ற வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை ஒரு நீதிபதி லஞ்சமாகப் பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்கினார் என்றால் அவர்மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு சொல்லி அதை நிரூபணம் செய்யவேண்டும். ஆனால், ஒரு வழக்கில் கீழமை நீதிபதி ஒரு தீர்ப்பை எழுதிவிட்டார் ஆனால் அந்த தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது மாறுகிறது என்றால்... ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய அந்த கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாக தீர்ப்பு வழங்கிவிட்டார் என்றோ, உள்நோக்கத்தோடு செய்துவிட்டார் என்றோ சொல்லக்கூடாது. சொல்லவும் முடியாது! உதாரணமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இப்போது பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கிறார். இது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு சென்று அவர் குற்றவாளியல்ல என வழக்கை தள்ளுபடி செய்துவிட்டால், ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஒரு உள்நோக்கத்துகாக, ஆதாயத்துக்காக செய்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா? அது தவறு. அடிப்படையில் வானதி சீனிவாசனே ஒரு வழக்கறிஞர். ஆனால், பயிற்சி இல்லாத layman போல, நீதித்துறையையே கேள்விக்குறியதாக்கும்படி பேசியிருக்கிறார். இவர் சொல்வது இந்திய நீதித்துறை பரிபாலன அமைப்பிலேயே சாத்தியமற்ற ஒன்று. மிகமிக மிகத் தவறான கூற்று. ஏதோ ஒரு அரசியல் பரபரப்புக்காக இப்படி பேசுகிறார்" என விளக்கமளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/X9clnPI
0 Comments