Vijayakanth: தீவுத்திடல் ஏற்பாடு; இரு முறை அஞ்சலி, அரசு மரியாதை - தேமுதிக-வினரையும் ஈர்த்த ஸ்டாலின்?

`தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதிச் சடங்குகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செய்த மெனக்கெடல்கள் வெகுவாகப் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. முதல் ஆளாய் அஞ்சலி செலுத்தியதுமுதல் அரசு மரியாதை வழங்கி இறுதிச் சடங்குவரை உடனிருந்த முதல்வர் ஸ்டாலினின் செயல், தே.மு.தி.கவினரை நன்றியுடன் பார்க்க வைத்திருக்கிறது.

வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர். அந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல் மருத்துவமனையிலிருந்து சாலிகிராமம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டபோது, முதல் ஆளாகச் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறவிருந்த `வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா'வையே ரத்து செய்து, எளிமையான முறையில் பெரியார் திடலுக்குச் சென்று அந்த விழாவில் பெயரளவுக்கு தலைகாட்டிவிட்டு வந்தார்.

நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டாலின்:

அதையடுத்து விஜயகாந்த்தின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் நினைவலைகளைப் பதிவிட்ட ஸ்டாலின், ``விஜயகாந்த் ஒரு குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது" என உருக்கமாகப் பதிவிட்டார்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்:

மேலும், ``கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்!" என அறிவித்தார்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்

இட நெருக்கடி, தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு:

அந்த நிலையில், சாலிகிராமம் வீட்டிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தின் உடல் கொண்டுவரப்பட்டது. ஆனால், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் அந்த இடம் கொஞ்சமும் போதாத சூழல் ஏற்பட்டது. மேலும், கோயம்பேடு முழுக்க மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பெரும்பாலானோர் அஞ்சலி செலுத்தமுடியாத நிலை நீடித்தது. அந்த நிலையில், எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலி நடத்துவதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, தீவுத்திடலில் எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு துரிதமாக முடிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இறுதி ஊர்வலத்துக்கான வாகனத்தின் மலர் அலங்காரத்துக்காக செலவு 6 லட்சத்தை சென்னை மாநகராட்சியே ஏற்றது. தொடர்ந்து, விஜயகாந்த்தின் உடலை தே.மு.தி.க தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியையும் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை:

அதைத் தொடர்ந்து, விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கத்துக்காக தீவுத்திடலிலிருந்து தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, இரண்டாவது முறையாக விஜயகாந்த்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அவருடன் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது கடைசிவரை தனது இருக்கையில்கூட அமராமல் முதல்வர் ஸ்டாலின் நின்றபடியே கேப்டன் விஜயகாந்த்துக்கு இறுதி மரியாதை செலுத்தினார். `எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...' எனப் பதிவிட்டார்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

`தமிழ்நாடு அரசுக்கு நன்றியும், ஒரு கோரிக்கையும்!'

இது குறித்து நன்றி தெரிவித்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த், ``அரசு மரியாதையுடன் கேப்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இட நெருக்கடியாக இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பேசினோம். உடனடியாக தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்தார். இறுதி பயணத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்தார். தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அத்தனை அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி நிர்வாத்தினர் என அனைவருக்கும் இருகரம்கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் இறுதி பயணம் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறைக்கு கேப்டன் சார்பாகவும், தே.மு.தி.க சார்பாகவும் ராயல் சல்யூட்!" எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த்

மேலும், முதலமைச்சர், அமைச்சர்களிடத்தில், அவர்களாக ஒரு பொது இடத்தைத் தேர்ந்தெடுத்து கேப்டன் சிலையுடன் மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். தே.மு.தி.க என்றில்லாமல் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இதை நாங்கள் முன்வைக்கிறோம். அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகிறோம்!" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த் ஒருபோதும் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றதில்லை, அரசியல் கொள்கைரீதியிலும் எதிர் நிலைப்பாடுடையவர் என்ற போதும்கூட எந்தவித பாரபட்சமும் காட்டாமல் விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் தே.மு.தி.க-வினர் உள்ளிட்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு, வெகுவாக பாராட்டையும் பெற்றிருக்கிறது.



from India News https://ift.tt/WCkbMqd

Post a Comment

0 Comments