கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் 'சிவகிரி தீர்த்தாடனம்' என்ற பெயரில் ஸ்ரீநாராயணகுருவை பின்பற்றுபவர்கள் அங்கு சென்று வழிபடுவது வழக்கம். 91-வது சிவகிரி தீர்த்தாடனம் நேற்று தொடங்கியது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். தீர்த்தாடன தொடக்கவிழாவில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் ஸ்ரீநாராயணகுரு தர்ம சங்க தலைவர் சுவாமி சச்சிதானந்தா பேசுகையில், "புதிய கேரளத்தை உருவாக்கியவர் ஸ்ரீ நாராயண குரு. ஸ்ரீநாராயண குருவின் சமகாலத்தில் வாழ்ந்த மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடல் தமிழ்நாட்டில் அரசு பாடலாக உள்ளது. அது போன்று 'தெய்வ தசகம்' என்ற ஸ்ரீ நாராயண குருவின் பாடலை கேரள மாநிலத்தின் அரசு பாடலாக அறிவிக்க வேண்டும்" என முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோ சேர்மன் சோம்நாத் பேசுகையில், "மொபைல் போன்களுக்கு டவர்களுக்கு பதில் சேட்லைட் மூலம் நெட்வொர்க் இணைப்பு கொடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. டவர்களின் பயன்பாட்டை குறைத்துவிட்டு, சேட்டிலைட் மூலம் மொபைல் நெட்வொர்க் வழங்கும்பணி இன்னும் ஐந்து ஆண்டுகளில் நடக்கும்" என்றார். சிவகிரி தீர்த்தாடனத்தை தொடங்கிவைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "மனிதர்கள் வாழும் இடமாக கேரளாவை மாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. ஆன்மீகம், நாத்திகம் ஆகியவற்றின் பின்னால் அரசியல் இருப்பதை வைக்கம் போராட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.
காவி உடை வேண்டாம், மஞ்சள் ஆடை போதும் என குறிப்பிட்ட லட்சியத்துடன் ஸ்ரீ நாராயணகுரு முடிவு செய்திருந்தார். காவி ஒரு மதத்துடன் பந்தப்பட்டு நிற்பதால், தீர்த்த யாத்திரை வருபவர்களுக்கு மஞ்சள் ஆடை போதும் என ஸ்ரீநாராயணகுரு முடிவு செய்தார். வெள்ளை துணியை மஞ்சளில் முக்கி பயன்படுத்த வேண்டும் என ஸ்ரீநாராயண குரு உபதேசித்தார். பட்டு ஆடை வேண்டாம் என கூறியதன் மூலம் ஆடம்பரம் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார் ஸ்ரீ நாராயண குரு. குரு நிராகரித்ததை திரும்பவும் கொண்டுவர முயல்பவர்கள், ஸ்ரீநாராயணகுருவின் அறிவுரைகளை நினைவில்கொள்ள வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/rPg0nN3
0 Comments