Live Telangana Assembly Election Result 2023: தெலங்கானாவில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

2 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் பின்னடைவு!

சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

தெலங்கானாவில்ஆட்சி அமைக்க 60 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தற்போது அங்கு, காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ் அங்கு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவில், 64 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த நிலையில், இன்று காலை முதல் தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா தனி மாநிலமாக உருவான 2014-ம் ஆண்டுமுதல், அங்கு பி.ஆர்.எஸ் ஆட்சி நீடித்து வருகிறது. தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அந்தக் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் களத்தில் காங்கிரஸ், பா.ஜ.க-வும் இறங்கியதால், அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் அங்கம் வகிக்கும் சந்திர சேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ், இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறது.

தெலங்கானா சட்டமன்றம்

மறுமுனையில் தெலங்கானாவைக் கைப்பற்றிவிட வேண்டுமென காங்கிரஸ் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட 35 பேர் காங்கிரஸில் இணைந்ததே, காங்கிரஸ் கட்சிக்கு அங்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதைக் காண்பித்தது.

இந்த முறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சுனில் கனுகோலு, தெலங்கானாவிலும் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க-வும் மும்முரம் காட்டிவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்கள் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். காங்கிரஸைப்போலவே பா.ஜ.க-வும் ஏராளமான வாக்குறுதிகளை வாரிவழங்கியிருக்கிறது. மேலும், மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்னை, ஆளுங்கட்சியினரின் ‘அராஜகங்கள்’ என பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸும் பா.ஜ.க-வும் தொடர்ந்து பேசிவருகின்றன.

கே.சி.ஆர் - ராகுல் காந்தி

சந்திரசேகர ராவின் ஆட்சியில் ஹைதராபாத் அளவுக்கு தெலங்கானாவின் மற்ற பகுதிகள் எதுவும் வளரவில்லை என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் இரண்டு எதிர்க்கட்சிகளும் முன்வைத்திருக்கின்றன.

இந்த நிலையில்தான் விறுவிறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அக்னிப் பரீட்சையில் வெற்றிபெற்று, ஆட்சியமைக்கப் போவது இந்தக் கட்சி என்ற எதிர்பார்ப்பு அக்கட தேசத்து மக்களிடம் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.



from India News https://ift.tt/LWVapJ4

Post a Comment

0 Comments