டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் ஆரம்பித்த ஆம் ஆத்மியின் இந்தப் பயணம், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பஞ்சாப் மாநில வெற்றியோடு தொடர்ந்தது.
அடுத்த சில மாதங்களில் தேசிய கட்சியாகவும் ஆம் ஆத்மி உயர்ந்தது. இன்னொருபக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஆம் ஆத்மியின் முக்கிய புள்ளிகள் சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை வட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், பத்தே ஆண்டுகளில் 1,350 கட்சிகளில் 3-வது கட்சியாக ஆம் ஆத்மி உயர்ந்திருப்பதாகவும், நல்லது செய்யவில்லை என்றால் ஆம் ஆத்மி தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் 12-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``இந்த 10 ஆண்டுகளில் 1,350 அரசியல் கட்சிகளில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நாம் வெற்றிபெறாமலோ, நல்லதைச் செய்யாமலோ இருந்திருந்தால், நம் கட்சித் தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள், அவர்கள் அனைவரும் இன்று தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.
இரண்டு பெரிய கட்சிகள் இந்த நாட்டை 75 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கின்றன. அவர்கள் அவ்வளவு எளிதில் ஆட்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நாம் ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனாலும், நாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இன்று சிறையிலிருக்கும் நம் ஐந்து தலைவர்களும் நம் ஹீரோக்கள். அவர்கள் அனைவரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருக்கிறேன். சிறையிலிருக்கும் போதுகூட, நம் தலைவர்களின் உற்சாகம் இன்னும் அதிகமாக இருப்பது மிகவும் நல்ல விஷயம்.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அன்று, 'பரவாயில்லை, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் சிறையிலிருப்பேன். இந்த வழக்கு முற்றிலுமாக புனையப்பட்ட வழக்கு. எனது போராட்டம் தொடரும்' என அவர் எனக்கு செய்தியனுப்பினார். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்தால் சிறைக்குச் செல்ல வேண்டும். ஏழைகளுக்கு இலவச மருத்துவம் கொடுத்தால் சிறை செல்ல வேண்டும். பொது நலனுக்காக நாம் தேர்ந்தெடுத்த பாதைகளுக்காக சிறை செல்ல வேண்டும். மக்களவைத் தேர்தலில், இந்தியக் கூட்டணியின் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி இருக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் நமக்குக் கிடைக்கும் இடங்களில் அனைத்தையும் வெற்றி பெறுவதே நம் இலக்கு" என்று கூறினார்.
from India News https://ift.tt/SmBqoLt
0 Comments