நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று முந்தினம் (நவ. 2) ஆஜரானார். அப்போது, அவரிடம் இழிவான, பாரபட்சமான, நெறிமுறையற்ற முறையில் குழுவின் தலைவர் நடந்துகொண்டதாக மஹுவா குற்றம்சாட்டுகிறார்.
பா.ஜ.க எம்.பி-யான வினோத் சோன்கர் தலைமையிலான நெறிமுறைகள் குழு மஹுவாவிடம் விசாரணை நடத்தியது. அப்போது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி-யான என்.உத்தம் குமார் ரெட்டியும், ‘மஹுவாவிடம் மிகவும் அந்தரங்கமான கேள்விகளை நெறிமுறைகள் குழுவினர் கேட்டனர்’ என்று குற்றம்சாட்டி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
நெறிமுறைகள் குழு அனுப்பிய சம்மன் அடிப்படையில் குழு முன்பாக ஆஜரான மஹுவா கூட்டத்திலிருந்து பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார். பின்னர் அவர், ‘சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளைக் கேட்காமல், அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் என் அந்தரங்கம் தொடர்பான கேள்விகளை குழுவின் தலைவர் கேட்டார். அவை, என் உடைகளை அவிழ்ப்பதற்கு சற்றும் குறைந்தவை அல்ல’ என்று குழுவின் தலைவர் மீது குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணையின்போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் எழுதியிருக்கிறார் மஹுவா மொய்த்ரா.
ஆனால், கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து திசைதிருப்பும் வகையில் பொய் குற்றச்சாட்டுகளை மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் நெறிமுறைகள் குழுவின் தலைவரான வினோத் சோன்கர். குழுவின் தலைவரையும், குழு உறுப்பினர்களையும் தகாத வார்த்தைதகளால் மஹுவா மொய்த்ரா சாடினார் என்று ஆளும் பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
‘நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க ஒரு தொழிலதிபரிடம் பணம் வாங்கினார்’ என்று மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டினார் பா.ஜ.க எம்.பி-யான நிஷிகாந்த் துபே. மேலும், இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு துபே புகார் கடிதம் எழுதினார். அதில், ‘தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனிடமிருந்து பணத்தையும், பரிசுகளையும் பெற்று நாடாளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா கேள்விகள் கேட்டிருக்கிறார்.
எனவே, அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று துபே கோரியிருந்தார். ‘சமீபத்தில் மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் எழுப்பிய 61 கேள்விகளில், 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் வணிக நலன்களுடன் தொடர்புடையவை. இந்தக் கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றியவை. ஹிரானந்தனி குழுமம், அதானி குழுமத்தின் போட்டிக் குழுமம்’ என்றும் தனது புகாரில் துபே தெரிவித்திருந்தார்.
நெறிமுறைகள் குழுவின் தலைவர் தன்னிடம் இழிவாக நடந்துகொண்டார் என்று மஹுவா குற்றம்சாட்டிய நிலையில், ‘கேள்வி கேட்பதற்கு பணம் வாங்குபவர்கள் எம்.பி-யாக இருக்கும் அவையில் நாங்களும் ஒரு அங்கமாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. நெறிமுறைகள் குழுவில் நடந்த நிகழ்வு, நாடாளுமன்ற வரலாற்றில் ஓர் இருட்டு அத்தியாயம். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யை (மஹுவா) உலகில் எந்தவொரு சக்தியாலும் காப்பாற்ற முடியாது’ என்று நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.
மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக டேனிஷ் அலி, கிரிதரி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களும் நெறிமுறைகள் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மஹுவா அளித்திருக்கும் புகார் மீது மக்களவை சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/hw3NAvp
0 Comments