ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா' மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உறவுகள், உடைமைகளை இழந்து, எஞ்சிய உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் குடியிருப்புகளோ, பள்ளிக் கல்லூரிகளோ, மத வழிபாட்டுத்தளங்களோ அல்லது அகதிகள் முகாம்களோ... காஸா நிலப்பரப்பில் இருக்கும் அத்தனைப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது பார்வையில் `ஹமாஸ் போராளிக்குழுவின் தாக்குதல் நிலை'களாகவேக் கருதிக்கொண்டு போரை நடத்தி வருகிறது என உலக நாடுகளின் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஐ.நா. சபையில் `காஸா மீதானப் போரை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்' எனக்கோரி போர்நிறுத்த தீர்மானத்தை ஜோர்டான் நாடு கொண்டுவர அதை 120 நாடுகள் ஆதரித்தும், 14 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்பட சுமார் 45 நாடுகள் வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்தன. பெரும்பாலான நாடுகள் போர் நிறுத்தம் கோரி வாக்களித்தாலும், அதையெல்லாம் மதிக்காது தனது தாக்குதலை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
அந்த வகையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி, ஹமாஸ் அமைப்பின் முக்கியப் படைத்தளபதி இப்ராஹிம் பியாரி உள்ளிட்ட போராளிக்குழுவினர் காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள்(jabalia refugee camp) முகாமில் தங்கியிருப்பதாகக்கூறி, திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் அகதிகள் முகாமில் எந்தவித முன்னறிவிப்புமின்றி, `ஐ.நா. போர் விதிமுறைகளின் படி அகதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது’ என்ற உத்தரவையும் மீறி இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக வான்வழித் தாக்குதலை அகதிகள்முகாம் மீது நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஆனால் ஜபாலியா முகாம் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் ஜொனாத்தன் கான்ரிக்கஸ்(jonathan conricus), ``இந்த தாக்குதலில் இப்ராஹிம் பியாரியை வீழ்த்தியதுதான் மிகவும் முக்கியமானது. அதேநேரம் பியாரி உள்பட பொதுமக்கள் 50 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். அனால் அதில் பலரும் தீவிரவாதிகள்தான். தாக்குதலின்போது பொதுமக்கள் உயிரிழப்பதைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இஸ்ரேலின் இந்தக் கூற்றை முற்றிலுமாக நிராகரித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, ``இந்தத் தாக்குதலில் இப்ராஹிம் பியாரி(ibrahim biari ) ஒன்றும் கொல்லப்படவில்லை! அவரைக் கொன்றுவிட்டதாகப் போலிச் செய்திகளை இஸ்ரேல் தெரிவிக்கின்றது. ஹமாஸ் அமைப்பை அழிக்கப்போகிறோம் என்ற போர்வையில் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் வேட்டையாடிக்கொண்டிருக்கிறது!" என குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், ``ஜபாலியா முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 195 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார், 777 பேர் காயமடைந்திருக்கிறார்கள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள்!" என அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில், காஸா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து தனது `எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ``ஜபாலியா அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இவை `போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்' எனக் கருதுகிறோம்!" எனத் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரெய்க் மொக்கிபர், ``காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் பாலஸ்தீன இன அழிப்பை ஐ.நா. தடுக்கத் தவறிவிட்டது. அங்கே அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்தத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரித்து வருகின்றன. இஸ்ரேலின் இரக்கமற்ற இந்தத் தாக்குதலை இவை அனைத்தும் இணைந்துதான் அரங்கேற்றுகின்றன. இதைத் தடுக்க முடியாத ஐ.நா.விலிருந்து நான் விலகுகிறேன்!" என்று குறிப்பிட்டு தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இஸ்ரேலின் மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றம், ஜபாலிய அகதிகள் முகாம் தாக்குதலை இரான், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, ஏமன் நாட்டிலிருந்து செயல்பட்டுவரும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளும் களமிறங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. போர்நிறுத்தம் செய்யமுடியாமல் ஐ.நா.வும் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்க, வல்லரசு நாடுகளும் தொடர்ந்து வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Asm7FyV
0 Comments