திவால் நிலைக்கு விண்ணப்பித்த வீஒர்க் நிறுவனம்... இந்தியாவுக்கு பாதிப்பா?

நியூயார்க்கை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பணியிட பகிர்வு நிறுவனமான வீ ஒர்க் (WeWork) அமெரிக்காவில் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளது. 

வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் அலுவலக இடம் மற்றும் உபகரணங்கள், வரவேற்பாளர், பாதுகாவலர் சேவைகள் என ஒருசேர அனைத்தையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளும் ஐடியாவை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட வீவொர்க் நிறுவனம் பலரிடையே கவனம் பெற்றது. பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த திட்டத்தை ஆதரித்தன.

திவால் நடவடிக்கை

ஆனால், கோவிட் தொற்றின் போது பல நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக பெரும் சரிவைச் சந்தித்தன. அப்போது வீவொர்க் நிறுவனமும் பொருளாதார ரீதியாகச் சரிவைச் சந்தித்தது. மேலும் 2019-ல் அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடும் தோல்வியடைந்தது.

இந்தநிலையில் நிறுவனம் திவால் நிலையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சேப்டர் 11 மனுவை நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது. நிறுவனத்தின் சொத்துக்கள் 10 பில்லியன் முதல் 50 பில்லியன் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் நியூமன் (Adam Neumann) 2010-ல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2019-ல் நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வீவொர்க்கின் மொத்த வருவாயில் இருந்து சுமார் 74 சதவிகிதம் அதன் ஆபிஸ் குத்தகைக்கு மட்டுமே செலவழிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் ஜூன் 30-ம் தேதி வரை 39 நாடுகளிலும் 777 இடங்களிலும் தடம் பதித்ததுள்ளது. ஆனாலும் நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது சமீப ஆண்டுகாலமாக லாபமற்றதாகவே இருந்திருக்கிறது. ஜப்பானின்  சாஃப்ட்பேங்க் (SoftBank) குழுமத்தின் முதலீட்டில் வீவொர்க் இயங்கி வந்தது.  

2021-ம் ஆண்டில், ஸ்பாக் செயல்முறையின் ஒரு பகுதியாக மீதமுள்ள வீவொர்க் பங்குகளில் சாஃப்ட்பேங்க்-ல் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டாலர்களை நியூமன் பெற்றதாகக் கூறப்படுகிறது. சில பிரச்னைகளின் காரணமாக நியூமன் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் `வீஒர்க் குளோபல்’ திவால் நிலைக்குத் தாக்கல் செய்திருப்பது இந்தியாவில் உள்ள அதன் பங்குதாரர்களைப் பாதிக்காது என்றும், `வீஒர்க் இந்தியா’ சுதந்திரமாகச் செயல்படும் என்றும் கூறியுள்ளது. 

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ``வீவொர்க் இந்தியா என்பது வீஒர்க் குளோபல்-லிருந்து ஒரு தனி நிறுவனம். 

சமீபத்திய திவால் தாக்கல் இந்தியாவில் உள்ள எங்கள் உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களைப் பாதிக்காது. நாங்கள் எங்கள் உறுப்பினர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட்டு சேவை செய்வோம். வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உறுதி கொண்டுள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளது. 



from India News https://ift.tt/VB1Xgty

Post a Comment

0 Comments