செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க
“தி.மு.க-வின் உண்மையான பாசிச முகம் வெளிப்பட்டிருக்கிறது. தங்கள் விளைநிலங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நாட்கணக்கில் போராடும் விவசாயிகளை ஈவு, இரக்கமில்லாமல் குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருக்கிறது தி.மு.க அரசு. பிரச்னை பூதாகரமானதும், குண்டர் சட்டத்தை அவசர அவசரமாக ரத்துசெய்து, நல்லவன் வேடம் போடுகிறார்கள். ‘நானும் டெல்டாகாரன்தான்’ என்று முதல்வர் வீரவசனம் பேசியதெல்லாமே பச்சைப்பொய் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. ‘தொழிற்சாலையை வானத்தில் கட்ட முடியாது’ என்கிறார் தி.மு.க அமைச்சர். அப்படியென்றால் விவசாயத்தை வானத்திலும் கடலிலும் செய்துகொள்ளப் போகிறார்களா... எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று, ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறொன்று என மாற்றிப் பேசுவது தி.மு.க-வுக்கு வாடிக்கையான விஷயம். தி.மு.க காவுகொடுத்த டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றிப் பாதுகாத்தது அ.தி.மு.க அரசு. எப்போதுமே விவசாயிகளுக்கான அரசு என்றால், அது அ.தி.மு.க மட்டுமே. விரைவில் தி.மு.க அரசை மக்கள் தூக்கி எறியத்தான் போகிறார்கள். அதை வரும் தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம்.”
காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க
“1978-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்துப் போராடிய விவசாயிகளை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற அ.தி.மு.க-வுக்கு விவசாயிகள் நலன் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... 2020-ல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்து, விவசாயிகள் முதுகில் குத்திய பச்சோந்தி பழனிசாமி, இப்போது விவசாயிகளின் ஆதரவாளர்போல நாடகம் போடுகிறார். அ.தி.மு.க-போலன்றி, தி.மு.க என்றுமே விவசாயிகளின் பக்கம் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறது. விவசாயிகளுக்குக் கட்டணமின்றி இலவச மின்சாரம் வழங்கியது தொடங்கி எத்தனையோ நன்மைகளை ஒவ்வோர் ஆட்சியிலும் செய்துவருகிறது தி.மு.க. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிப்காட் அமைக்கப்பட்டு வருவதன் மூலமாக, அங்கிருக்கும் படித்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைந்துவருகிறார்கள். இந்த உண்மைகளை மறைத்து, அமைச்சரின் பேச்சைத் திரித்து, தவறாகச் சித்திரிக்கிறது ஒரு கூட்டம். தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் துயர் துடைக்கப்படுமே தவிர, யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எதிர்க்கட்சியினர் பரப்பும் பொய்களை எந்த விவசாயியும் நம்பத் தயாராக இல்லை.”
from India News https://ift.tt/uK63qNy
0 Comments