`ரெய்டு மூலமாக தி.மு.க-வையும் மிரட்டலாம்' என பகல் கனவு காண்கிறார்கள் என்ற மு.க.ஸ்டாலினின் விமர்சனம்?

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

‘‘முதல்வர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை தொடங்கி, தங்கமணி, வீரமணி வரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ரெய்டு நடைபெற்றது... ஆவணங்களும் சிக்கின. எனவே, பல்லக்குத்தூக்கி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசு சொல்லும் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு கடைசிவரை அவர்களுக்கு அடிமையாகவே இருந்தார்கள். அதன் நன்றிக்கடனாகவே ஒன்றிய பா.ஜ.க அரசு இதுவரை முன்னாள் அமைச்சர்கள் குறித்த ஊழல்களை விசாரிக்க அனுமதிகூடக் கொடுக்காமல் இருக்கிறது. இன்றைய நிலையில் இந்திய அளவில் பா.ஜ.க-வை மிகத் தீவிரமாக எதிர்த்துவருவது தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். எனவே, தங்களின் கிளை அமைப்புகளான ஐ.டி., இ.டி-களை வைத்து தி.மு.க-வை அச்சுறுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். பாவம், தி.மு.க-வின் வரலாறு அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து மண்டியிட நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க கிடையாது. அனைத்தையும் நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்போம்.’’

சி.வி.எம்.பி.எழிலரசன், இராம ஸ்ரீநிவாசன்

இராம ஸ்ரீநிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

‘‘முதல்வர், பயத்தில் ஏதேதோ உளறுகிறார். முதல்வர் தொடங்கி பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையிலுள்ள அனைவருமே ஒரேபோல ஐ.டி., இ.டி சோதனை நடைபெற்றால், ‘பழிவாங்கும் நடவடிக்கை’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போதே இன்றைய முதல்வர் ஸ்டாலின் மீது சி.பி.ஐ ரெய்டு நடந்ததே... அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கியது தி.மு.க. அப்படியென்றால் ரெய்டு மூலம் காங்கிரஸ், தி.மு.க-வை மிரட்டியது என்று எடுத்துக்கொள்ளலாமா... பா.ஜ.க., ஒருபோதும் அரசு அமைப்புகளைத் தவறாக வழிநடத்தாது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க-வினர் அதிக அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள். அதன் விளைவாகவே சோதனைகள் நடைபெறுகின்றன. தவறு எதுவும் செய்யவில்லை என்றால் பயமும் பதற்றமும் எதற்கு... உண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு தி.மு.க-தான் பழிவாங்கும் நடவடிக்கையைச் செய்துகொண்டிருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க-வை மிரட்டியிருந்தால், அவர்கள் எப்படி எங்கள் கூட்டணியைவிட்டு வெளியே செல்வார்கள்?’’



from India News https://ift.tt/e47XpRg

Post a Comment

0 Comments