`நாய் இறைச்சியை உட்கொள்ளும் நூற்றாண்டு கால பழக்கம்' - தடை விதிக்க முன்வந்த தென் கொரியா அரசு!

தென் கொரியாவின் நூற்றாண்டு கால பழமையான பாரம்பர்ய பழக்க வழங்கங்களில் ஒன்று, நாய் இறைச்சியை உட்கொள்ளுதல். இந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. இத்தகைய சூழலில்தான், தென் கொரியாவின் ஆளுங்கட்சியான பீப்பிள் பவர் கட்சி (People Power Party), இந்தாண்டின் இறுதிக்குள் நாய் இறைச்சியை உட்கொள்வதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. நாய் இறைச்சியை உட்கொள்ளும் தென் கொரிய மக்களின் பழக்கத்துக்கு, சர்வதேச அளவில் பல விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தற்போது, தென் கொரியாவிலேயே இதற்கான எதிர்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.

நாய் | மாதிரிப் படம்

இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது, அந்த நாட்டு இளைய தலைமுறையிடம் வளர்ந்துவரும் பொது உணர்வு தான். இது, விலங்குகளின் நலன் மீதான தென் கொரியச் சமூகத்தின் மாறுபாடடைந்த பார்வையைப் பிரதிபலிக்கிறது. மேலும், சர்வதேச விலங்கு உரிமைக் குழுக்களின் விமர்சனங்கள் மற்றும் உலகளவில் வளர்ந்து வரும் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாய் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகங்களுக்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவியுடன் கூடிய சலுகைக் காலம் வழங்குவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது.

தென் கொரிய அரசின் இத்தகைய முடிவை விலங்குகள் உரிமைக் குழுக்கள் வரவேற்றிருக்கின்றன. இதுபற்றி ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் ஒரு அறிக்கையில், ``பல ஆண்டுகளாக இந்தக் கொடுமைக்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்களின் கனவு, இந்த முடிவால் நனவாகும்" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் விலங்குகள் உரிமைச் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய ஆளும் பீப்பிள் பவர் கட்சியின் கொள்கைத் தலைவர் யு இயு-டாங் (Yu Eui-dong), ``நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிராக வரும் சமூக விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு, சிறப்புச் சட்டம் இயற்றுவதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல்

தென் கொரிய அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) கூட, நாய் இறைச்சி உண்பதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். எதிர்ப்பதோடு நிற்காமல், தன் கணவரான அதிபர் யூன் சுக் இயோலுடன் (Yoon Suk Yeol) சேர்ந்து தெருநாய்களையும் தத்தெடுத்திருக்கிறார் கிம் கியோன் ஹீ.

இதற்கு முன்பு, இயற்றப்பட்ட இறைச்சி நுகர்வு தடுப்பு மசோதாக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு, விவசாயிகள், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலைகளால் தோல்வியடைந்தன. அதோடு, நாய் இறைச்சி உண்ணும் இந்த பழம்பெரும் வழக்கம், கோடை வெப்பத்தை வெல்வதற்கான வழியாகவும் கருதப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்த நடைமுறை பெரும்பான்மையாகக் குறைந்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமே இன்னமும் நாய் இறைச்சி உண்பதாகவும், சிறிய உணவகங்களில் மட்டுமே அவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென் கொரியா

தென் கொரியாவில் இப்போதைக்கு, சுமார் 1,150 நாய் வளர்ப்புப் பண்ணைகள், 34 இறைச்சிக் கூடங்கள், 219 விநியோக நிறுவனங்கள், சுமார் 1,600 நாய் இறைச்சி உபயோகிக்கும் உணவகங்கள் இயங்கி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்து ஆண்டு நடத்தப்பட்ட Gallup Korea கணக்கெடுப்பின்படி 64 சதவிகிதம் பேர் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டில் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே நாய் இறைச்சி உட்கொண்டதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இது, 2015-ல் 27 சதவிகிதத்திலிருந்து இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது.



from India News https://ift.tt/DulEV3P

Post a Comment

0 Comments