ஏற்கனவே ஏற்பட்ட பஞ்சாய்த்து காரணமாக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளருக்கு எதிராக தலைமைக்கு கடிதம் அனுப்பி போர் கொடியை உயர்த்தி இருக்கிறார்கள் திருநெல்வேலி உடன்பிறப்புகள். இதுதொடர்பாக நெல்லை திமுகவில் என்னதான் நடக்கிறதென்று விசாரித்தோம்...
இதுகுறித்து நெல்லை மாவட்ட சீனியர்களிடம் பேசினோம். "'நெல்லை எனக்கு எல்லை... குமரி எனக்கு தொல்லை...' என மறைந்த தலைவர் கருணாநிதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆனால், நெல்லையே இப்போது பெரும் தொல்லையாகிவிட்டது. அந்தளவுக்கு நெல்லை தி.மு.கவு-க்குள் கோஷ்டி பிரச்னை தலைவிரித்தாடுகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் மத்திய மாவட்ட செயலாளர் வஹாப்-க்கும் இடையே ஏற்பட்ட மோததால், நெல்லை மாவட்ட தி.மு.க-வின் வளர்ச்சி மட்டுமல்லாது மாநகர வளர்ச்சியும் கடுமையாக பாதித்தது. ஒருகட்டத்தில் புகார்களை சமாளிக்க முடியாமல் வஹாப்பை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தலைமை.
மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, தங்கம் தென்னரசு கொண்டு வரப்பட்டார். பொறுப்பு அமைச்சர்கள் அரசு நிர்வாகம் சார்ந்து செயல்பட்டாலும், கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பிரச்னைகளையும், கட்சிக்காரர்களின் பஞ்சாய்த்துகளை தலைமைக்கு எடுத்து செல்லும் பாலமாக செயல்பட்டனர்.

வஹாப் இடத்துக்கு சீனியரான முன்னாள் அமைச்சர் மைதீன்கானை கொண்டுவந்து பிரச்னை ஓரளவுக்கு சரிசெய்தது தலைமை. ஆனால், மைதீன்கானுக்கு எதிராக முன்னாள் மா.செ-வும், மேயர் சரவணனும் வேலை பார்க்க தொடங்கினர். இதை உணர்ந்த தலைமை, இருவரையும் அழைத்து எச்சரித்தது. ஆனால், யாருமே எதிர்பாராமல் மைதீன்கானுக்கும் மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கும் மோதல் வெடித்தது. ஆரம்பத்திலேயே இதுதொடர்பான பஞ்சாய்த்து பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் சென்றது.
ஆனால், அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில்தான், தீபாவளிக்காக தலைமையிடமிருந்து மாவட்டத்துக்கு போனஸ் வந்திருக்கிறது. அதனை கட்சி நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமென்று தலைமையின் உத்தரவாம். அதன்படி, நெல்லை தி.மு.க-வுக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டுமென்று நினைத்த மைதீன்கான், தன் தரப்பு மூலமாகவே பட்டுவாடா செய்ய தொடங்கினார்.
இதனால், மாநகர சுப்பிரமணியன், ' மாநகருக்கான போனஸை என்னிடம் பிரித்து கொடுங்கள். நானே பட்டுவாடா செய்கிறேன்.' என்று கேட்டு இருக்கிறார். ஆனால், மைதீன்கான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால், கடுப்பான சுப்பிரமணியன் தரப்பு, ஏற்கனவே மைதீன்கான் மீது அதிருப்தியில் இருக்கும் வட்ட செயலாளர்களை வைத்து, போர் கொடியை உயர்த்த வைத்து இருக்கிறார். இதுகுறித்து நெல்லை சீனியர்கள் இருதரப்பை சமாதானம் செய்ய முயன்றும், அது நடக்கவில்லை.
இந்நிலையில்தான், மைதீன்கானுக்கு எதிராக நெல்லை மாநகர திமுகவில் உள்ள 31 வட்டச் செயலாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட திமுகவில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பொறுப்பு அமைச்சரை மாற்றியும் எந்த புண்ணியமும் இல்லை. இவ்வளவு நடந்தும் தலைமை நெல்லைமீது கவனம் செலுத்தவில்லையென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்குள் தலைமை நெல்லை கழகத்தில் நிலவும் கோஷ்டி பூசலை சரிசெய்யவேண்டும்.“ என்றனர் விரிவாக...
அந்த புகார் கடிதத்தில் மைதீன்கானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ’மாநகர செயலாளரை தொடர்பு கொள்ளாமல் பகுதி செயலாளர்களை தொடர்பு கொள்கிறார்’ என்ற குற்றச்சாட்டு, மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கும், மைதீன்கானுக்கும் இடையே இருக்கும் பனிப்போரை அமலப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் மற்றும் நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டு அவர்களை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக உள்ளோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/aofk2M8
0 Comments