புதுவை: `குழந்தைகளுக்குப் பால் கிடைப்பதில்லை; ஆனால் தடையின்றி மது கிடைக்கிறது'- எம்.பி வைத்திலிங்கம்

புதுச்சேரியில் நேற்றைய தினம் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவை அச்சுறுத்தும் வகையில், சீனாவிலிருந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுவாசத்தைப் பாதிக்கும் நோய் பரவுகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும். புதுவையில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அதைத் தடுக்காமல், அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது.

முதல்வர் ரங்கசாமி

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுத்து பணியாற்ற வேண்டும். சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, இதுவரை எந்த மருத்துவமனையையும் ஆய்வு செய்யவில்லை. முதலமைச்சர் நேரடியாக மருத்துவமனை பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்யவேண்டும். மதுக்கடைகளைத் திறந்து பாவத்தைச் சேர்க்கும் முதலமைச்சர் ரங்கசாமி, மருத்துவமனையில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு புண்ணியத்தைத் தேட வேண்டும்.

புதுவையில் குழந்தைகளுக்குப் பால் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் மது மட்டும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. புதுவை மின்துறை, கல்வித்துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தொழில்துறை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. இந்தத் துறைகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. மின்துறையை தனியாருக்கு அரசு விற்றுவிட்டதாகக் கருதும் வகையில், தனியார் மூலம் பணிகள் நடக்கின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

கல்வித்துறையில் ஓய்வுபெற்றவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். புதுவையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கின்றனர். இவர்களை நியமிக்க அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அமைச்சர் புதுவைக்கு தேவையா என மக்கள் சிந்திக்கின்றனர். தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டும். புதுவை முழுவதும் புற்றுநோய்போல கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பழக்கம் பரவியிருக்கிறது. இளைஞர்கள் இந்தப் பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள்தான் போதைப்பொருள்களை விற்பனை செய்கின்றனர்” என்றார்.



from India News https://ift.tt/mLdUJHf

Post a Comment

0 Comments