பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-11-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர்.
எங்கும் மெட்ரோ வாட்டர் பிரச்னை:
அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 135-வது வார்டு வி.சி.க கவுன்சிலர் சாந்தி (எ) யாழினி, ``எனது வார்டுக்குட்பட்ட அசோக் நகர், புதூர் பகுதியில் மழைநீர் பிரச்னை தீர்ந்தாலும், மெட்ரோ வாட்டர் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. காமராஜர் காலத்தில் போடப்பட்ட பழைய குழாய்கள்தான் இன்றளவும் இருக்கின்றன. இதனால், புதூர் பகுதியில் கழிவுநீர் (Drainage) வெளியேற வழியின்றி, கழிவுநீர் வடிகாலிலிருந்து மலம் வெளியேறுகிறது. காமராஜர் சாலையிலும் இதே நிலைதான். தவிர, சர்வமங்கல காலனி, 250 எல்.ஐ.ஜி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகள் தனியார் சாலை என்று கூறி, மாநகராட்சி அதிகாரிகள் செல்ல மறுக்கின்றனர்" என சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரி, ``ரூ.31.5 மதிப்பீட்டில் பம்பிங் ஸ்டேஷன், சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 50% பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது டெஸ்டிங் பணிகள் நடப்பதால், கழிவுநீர் லீக்கேஜ் ஆகியிருக்கிறது. இரண்டு நாள்களில் சரிசெய்துவிடுவோம்!" என்றார். இதையடுத்து பேசிய மேயர் பிரியா, ``இரண்டு நாள்கள், இரண்டு நாள்கள் என எத்தனை நாள்கள் இழுத்தடிப்பீர்கள்... ஒழுங்காக ஒரு வாரத்தில் சரிசெய்து முடிக்கிறீர்கள்!" என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டார். இதேபோல, பல்வேறு வார்டு கவுன்சிலர்களும் தங்கள் பகுதி மெட்ரோ வாட்டர் பிரச்னைகளை அடுக்கினர்.
மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை:
184-வது வார்டு தி.மு.க கவுன்சிலரும், 13-வது மண்டலத் தலைவருமான துரைராஜ், ``எனது மண்டலத்தில் 10-க்கும் மேற்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். மருத்துவக் கட்டடங்கள், தரமான உள்கட்டமைப்புகள் என சிறப்பான வகையில் இருந்தாலும், ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக அடையாறு அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். அதேபோல, 6 செவிலியர்களும் இல்லை; 1 லேப் டெக்னீஷியனும் இல்லை! இவை தவிர, அறுவை சிகிச்சைக்கு அத்தியாவசியமான மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கும் நிபுணர்கள் அறவே இல்லை. மாலுமி இல்லாமல் கப்பல் பயணிப்பதுபோல் இருக்கிறது சென்னை மாநகராட்சியிலுள்ள மருத்துவமனைகளின் நிலை. சுகாதாரத்துறை ஏன் மெத்தனமாக இருக்கிறது?" எனக் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
அதேபோல, 81-வது வார்டு தி.மு.க கவுன்சிலரும், பொதுசுகாதார நிலைக்குழுத் தலைவருமான சாந்தகுமாரி, ``பல்வேறு சுகாதார நிலையங்களிலும் மருத்துவ உபகரணங்கள் பழுதாக உள்ளன. அவற்றையெல்லாம் புதிதாக கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல, அனைத்து மண்டலங்களிலும் உள்ள சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு வாகனங்கள் இல்லை. எனவே, அனைத்து மண்டலங்களுக்கும் ஒரு `Closed Vehicle' வழங்க உத்தரவிட வேண்டும்!" என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, 20-வது வார்டு தி.மு.க உறுப்பினரும், 2-வது மண்டலத் தலைவருமான ஏ.வி.ஆறுமுகம், ``எங்கள் பகுதி நூர்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஸ் குமார், ``மருத்துவத்துறையில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. எனவே ஆணையரும், மேயரும் ஆய்வு நடத்த வேண்டும். அடுத்த மாமன்றக் கூட்டத்துக்குள் ஆணையர் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து, நல்ல முடிவை வழங்குவார்" என்று பேசினார்.
கழிவுநீர் கலப்பு, குப்பை, பூங்கா பராமரிப்பு... அடுக்கடுக்கான பிரச்னைகள்:
கல்வி, பூங்கா, விளையாட்டு நிலைக்குழுத் தலைவரும், 181-வது வார்டு தி.மு.க கவுன்சிலருமான விஸ்வநாதன், ``மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. வாட்ச்மென் இல்லை. இருக்கின்ற பராமரிப்பு ஊழியர்களும் வயதானவர்களாக இருப்பதால், அவர்களால் சுறுசுறுப்பாக இயங்கமுடியவில்லை. பூங்கா ஒப்பந்ததாரர்கள் எதையுமே கண்டுகொள்வதில்லை. இதனால் மாநகராட்சி பணம்தான் வீண் விரயமாகிறது. அதேபோல, பல இடங்களில் சாலைகளை அடைத்தபடி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதால் வாகனங்கள், பொதுமக்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கென்று தனியாக இடம் ஒதுக்கவேண்டும். மேலும், எங்கள் பகுதியிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனம், தனது கழிவுகளை சட்டவிரோதமாக பக்கிங்காம் கால்வாயில் கலந்துவிடுகிறது. அதேபோல, தனியார் மருத்துவமனை ஒன்றும் தனது கழிவுகளை பக்கிங்காம் கால்வாயில் கலக்கச் செய்கிறது. சாமானிய மக்கள் பாத்திரம் கழுவிய வீட்டுக் கழிவுநீரை கால்வாய்களில் கலந்தாலே, அதற்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் அதிகாரிகள், ஏன் இவற்றைக் கண்டுகொள்வதில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து பேசிய 24-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சேட்டு, ``சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட `நீர்வழித்திட்டம்' இன்றுவரை ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், ரெட்டேரி, புழல், பாலாஜி நகர் உள்ளிட்ட எங்கள் பகுதி மக்கள், கால்வாய் நீர் உட்புகுதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" எனக் குறைகளை அடுக்கினார். தொடர்ந்து பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் பேசிய நிலையில், மாமன்றக் கூட்டத்தின் இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்கள்:
அதில் தானப்பத்திரம் தொடர்பான பொருள் எண்:07 தொடர்பான தீர்மானத்துக்குப் பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக, பொருள் எண்: 30, சென்னை மாநகராட்சியிலுள்ள அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அனாதீன நிலம், கிராம நத்தம், நிலத்துக்கு உரிமையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாதவைமீது சொத்து வரி விதிக்கும் தீர்மானத்துக்கு நிலைக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அதில் NOC (No Objection Certificate) தடையின்மை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கும் விதிமுறையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர். `இந்த உரிமை வட்டாட்சியருக்கு இருந்தால் எளிதில் அனுமதி கிடைக்காது. எனவே, மாநகராட்சியே அந்த அனுமதி பெறும் உரிமையைக் கொண்டிருக்கும்படி தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்' எனப் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து அந்த தீர்மானமும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சியிலுள்ள 164 பள்ளிகளில், 25,468 மாணவ மாணவிகள் பயன்பெற்றுவரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை `வெளிநிறுவனம்' (outsourcing) மூலம் அதாவது தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்க அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
from India News https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-corporation-council-meeting-november-updates
0 Comments