சென்னை மாநகராட்சி: உயிரிழந்த கவுன்சிலர்கள்; பரிதவிக்கும் மக்கள்! - தேர்தலை தட்டிக்கழிப்பது யார்?!

சென்னை மாநகராட்சியில் முதல்வர் வீடிருக்கும் ஏரியா உட்பட நான்கு வார்டுகளில் கவுன்சிலர் பதவிகள் காலியாக இருப்பதால், சம்பந்தப்பட்ட வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லாடுவதாக நமது அலுவலகத்துக்குப் புகார்க் கடிதம் ஒன்று வந்தது. அதையடுத்து சென்னை மாநகராட்சி, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்புகளில் விசாரணை மேற்கொண்டோம்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், தி.மு.க 153 இடங்களிலும், அ.தி.மு.க 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், சி.பி.எம்., வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தலா 4 இடங்களிலும், மற்ற இடங்களில் இதர கட்சிகளும் வெற்றிபெற்றிருந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத்தும், 2023 பிப்ரவரி மாதம் 122-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஷீபா வாசுவும் உடல்நலக் குறைவால் காலமானார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 146-வது வார்டு தி.மு.க கவுன்சிலரான ஆலப்பாக்கம் சண்முகமும், செப்டம்பரில் 59-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சரஸ்வதியும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில் காலியாக இருக்கும் நான்கு வார்டுகளுக்கும் மாநகராட்சி மாமன்றச் செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், புதிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட வார்டுகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் தவித்துவருகின்றனர். கவுன்சிலர்கள் இல்லாத வார்டுகளின் நிலையை அறிய நேரடிக் கள ஆய்வில் இறங்கினோம்.

59-வது வார்டு, சத்தியவாணிமுத்து நகர், அசுத்தமான நிலையில் மூடப்பட்டு கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்

அகற்றப்படாத குப்பைகள்...அதிகரித்த கொசுத் தொல்லை!

ராயபுரம் (5-வது) மண்டலத்துக்குட்பட்ட 59-வது வார்டு பகுதியில், பல்லவன் சாலைக்கு அருகிலிருக்கும் சத்தியவாணிமுத்து நகருக்குச் சென்றோம். அங்கு, குப்பைகள் சரிவர அகற்றப்படாமலும், சாலைகளில் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியும் அசுத்தமாகக் காட்சியளித்தன. அந்தப் பகுதி மக்களிடையே பேசும்போது, ``கவுன்சிலர் இல்லாத எங்கள் பகுதியை யாருமே கண்டுகொள்வதில்லை. எங்கே பார்த்தாலும் அள்ளப்படாத குப்பைகள்தான் காணப்படு கின்றன. மழைக்காலத்தில் சாக்கடையும் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கி, சாலைகளில் ஓடுகிறது. மருந்து தெளிக்கப்படாததால் கொசுத் தொல்லையும் அதிகரித்துவிட்டது. மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடமும், கேரம் போர்டு அலுவலகமும் பராமரிப்பின்றி பல மாதங்களாகப் பூட்டிக் கிடக்கிறது” என்றனர்.

59-வது வார்டு, எல்லீஸ் ரோடு, அண்ணாசாமி தெருவில் பொங்கிவழியும் கழிவுநீர் கால்வாய்

அதேபோல, 59-வது வார்டுக்குட்பட்ட பார்க் டவுன், மின்ட் ஸ்ட்ரீட், ஏகாம்பரேஸ்வரர் கோயில் அக்ரஹாரம் எனப் பல பகுதிகளிலும் குப்பைகள் அள்ளப்படாமலும், மழைநீர் தேங்கியும் மோசமான நிலையில் இருந்தன. மறைந்த கவுன்சிலரின் வீடு அமைந்திருக்கும் திருவல்லிக்கேணியை ஒட்டிய எல்லீஸ் சாலைப் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, தேவி தியேட்டர் பின்புறமுள்ள அண்ணாசாமி தெருவில் பாதாளச் சாக்கடைக்குள்ளிருந்து கழிவுநீர் வெளியேறி, பல நாள்களாக அந்தப் பகுதியே சாக்கடைக் குளமாகக் காட்சியளிக்கிறது.

“முதலமைச்சர் ஏரியாவிலேயே கவுன்சிலர் இல்லை!”

தேனாம்பேட்டை (9-வது) மண்டலத்துக்கு உட்பட்ட 122-வது வார்டுக்குச் சென்றோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்திருக்கும் இந்த வார்டில் கடந்த 10 மாதங்களாக கவுன்சிலர் இல்லாத அவலநிலை நீடிக்கிறது. முதல்வரின் வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளைத் தவிர வார்டின் மற்ற பகுதிகளின் நிலையும் மோசம்தான். குறிப்பாக, ஆஸ்டின் நகர் முதல் தெருவைச் சேர்ந்த மக்கள் குடிநீரில் கொசுப்புழுக்களும் கலந்துவருவதாக வேதனை தெரிவித்தனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்க ளெல்லாம் பழுந்தடைந்து கிடப்பதால் திருட்டு குறித்த அச்சம் பரவியிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போயிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

122-வது வார்டு, சேமியர்ஸ் சாலை, முதல்வர் பகுதி வார்டின் நிலை..

கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசும்போது, ``மழை பெய்தால்போதும், எஸ்.எம்.நகர், அப்போலோ மருத்துவமனைப் பகுதிகளிலிருந்து மொத்த மழைநீரும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள்தான் வந்துவிடும். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து நாற்றம் அடிக்கிறது” என்றனர் வேதனையுடன். அதேபோல, கணேசபுரம் 3-வது தெருவில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு உதவாமல், பல மாதங்களாக பூட்டிக்கிடப்பதாகத் தெரிவித்தனர். இந்த வார்டிலேயே மிகவும் மோசமாகக் காட்சியளிப்பது சேமியர்ஸ் சாலை ஏரியாதான். பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் பொங்கி வழிந்து அந்தப் பகுதிக்கே நோய் பரப்பிக்கொண்டிருக்கிறது. ``குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்தச் சாக்கடை நாற்றத்துக்குள் குடியிருக்கிறோம். பல தடவை முறையிட்டபோதும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார்கள் வார்டு மக்கள்.

122-வது வார்டு, கணேசபுரம், பூட்டியே கிடக்கும் இலவசப் பொதுகழிப்பிடம்

தோண்டப்பட்ட சாலைகள்... இடிந்துவிழும் நிலையில் பாலம்... ஆபத்தான நிலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்!

ஓராண்டாக கவுன்சிலர் இல்லாத ஆலந்தூர் (மண்டலம்-12) மண்டலத்துக்குட்பட்ட 165-வது வார்டை வட்டமடித்தோம். பாரத் நகர், தாமிரபரணி தெரு, நிலமங்கை நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கோவிந்தராஜு தெரு, கேசரி நகர் எனப் பெரும்பாலான பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட எந்தச் சாலையும், பணிகள் முடிந்த பிறகும் சீரமைக்கப் படாததால் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. `கடந்த மார்ச் மாதம் கால்வாய் பணிக்காக இந்த ரோட்டை யெல்லாம் தோண்டிப்போட்டாங்க, ஆனால், இன்னமும் சரி பண்ணலை...’ என வேதனை தெரிவிக்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்.

165-வது வார்டு, ஆபத்தான வானுவம்பேட்டை சிதம்பரனார் தெரு பாலம்,

வானுவம்பேட்டை சிதம்பரனார் தெருவில் இருக்கும் கால்வாய் பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் தருவாயில், தடுப்புச்சுவர்களின்றி, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அதே பாலத்தில் வரிசையாகக் குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டிருக் கின்றன. இன்றுவரை அது சரிசெய்யப்படாததால் பள்ளிக் குழந்தைகளும் ஆபத்தான முறையில் அந்தப் பாலத்தைக் கடந்துசெல்கிறார்கள்.

165-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர், நங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகள்

இவை தவிர, 165-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர், நங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. வளசரவாக்கம் (11-வது) மண்டலத்துக்குட்பட்ட 146-வது வார்டுக்குச் சென்றோம். அங்கும் மற்ற வார்டுகளைப்போலவே குப்பை பிரச்னை, கொசுத் தொல்லை, மோசமான சாலைகள் எனப் பல்வேறு பிரச்னைகள் சரிசெய்யப் படாமலிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நான்கு வார்டுகளைச் சேர்ந்த மக்களும் நம்மிடம் வைத்த கோரிக்கை, ``வார்டுகளின் பிரச்னைகளை மாநகராட்சி மாமன்றத்தில் கோரிக்கையாக எழுப்பி, குறைகளைத் தீர்க்க புதிய கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும். இதற்கு மேலும் தட்டிக்கழிக்காமல், சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும்” என்பதுதான்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ``சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் மரணத்தையடுத்து காலியான பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் மாநகராட்சி மாமன்றச் செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறோம். இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு, தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும். அதிகாரபூர்வமாகத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகும்போது, இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் சென்னை மாநகராட்சி வழங்கும்” எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

`சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் காலியாக இருக்கும் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல் நடத்த, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும்’ என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம்.

மக்களவைத் தேர்தலுக்கு ஆர்வம் காட்டும் ஆளுங்கட்சி, உள்ளாட்சி இடைத்தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/9y6CzGc

Post a Comment

0 Comments