பரோலில் செல்லும் கைதிகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் திட்டம் - மத்திய அரசு செய்வது சரியா?!

‘பரோல்‘ எனப்படும் தற்காலிக விடுப்பில் செல்லும் சிறை கைதிகளைக் கண்காணிக்க மாநில அரசுகள் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும், கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கவும் இந்த நடைமுறை பயன்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

சிறைக் கைதி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘சிறைகள் சட்டம் 1894’, ‘கைதிகள் சட்டம் 1900’ ஆகிய சட்டங்களில் தற்போதைய காலத்துக்கு ஒவ்வாத பிரிவுகள் இருப்பது கண்டறியப்பட்டன. அந்த இரு சட்டங்களிலும் குற்றவாளிகளைச் சீர்திருத்துவது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது ஆகியவை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

அந்தச் சட்டங்களில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. எனவே, ‘மாதிரி சிறைகள் சட்டம் 2023’-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் ஒரு பகுதியாக பல ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான அறிவுறுத்தல், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடந்த மே மாதம் அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது, உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் அது வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறை

பரோலில் விடுவிக்கப்படும் கைதிகள் வெளியே தங்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கருவிகளை அணிந்துகொள்ள சம்மதம் தெரிவித்தால் மட்டுமே சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கும் நடைமுறை இனி அமலுக்கு வரப்போகிறது. சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு கண்காணிப்புக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் சிறை விடுப்பு எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அந்த கைதிக்கு வழங்கப்படாது என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு மத்திய உள்துறையிடம் விரிவான அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்தது. அதில், ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் காலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை காஷ்மீர் போலீஸார் உடனடியாக அமல்படுத்தினர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தீவிரவாதி ஒருவரின் காலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தும் நடைமுறையை அவர்கள் கொண்டுவந்தனர்.

சிறைச்சாலை

ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த குலாம் முகமது என்பவர், தீவிரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கியது தொடர்பாக 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு, ஜம்முவிலுள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டபோது, அவரது காலில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது.

‘நீதிமன்ற அனுமதியுடன் அவரது காலில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அவரது நகர்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இத்தகைய நடைமுறை மூலமாக, ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகள் தலைமறைவாவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும் என்று காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலை

இதுபோக, சிறை சீர்திருத்தம் குறித்து பல புதிய அம்சங்கள் மாதிரி சிறைகள் சட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது, சிறைகளின் பாதுகாப்பு அம்சங்கள், கைதிகளை வகைப்படுத்தி பிரித்துவைத்தல், குறைகளைத் தீர்த்தல், சிறை மேம்பாட்டு வாரியம், பெண் கைதிகளுக்கும் திருநங்கை கைதிகளுக்கும் தனியாக தங்குமிடம் போன்ற அம்சங்கள் மீது மாதிரி சிறைகள் சட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சிறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் மாதிரி சட்டத்தில் பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில்தான், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. சிறை நிர்வாகம் மாநில அரசின் கீழ் வரும் என்பதால், இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

சிறைச்சாலை

கைதிகளின் காலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொறுத்துவது சரியா... இது மனித உரிமைகள் மீறல் இல்லையா... இது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா... என்ற கேள்விகள் வரலாம். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் ஜாமீனில் விடுவிக்கப்படும் கைதிகளின் உடலில் ஜி.பி.எஸ் கருவிவைப் பொருத்துவதற்கான நடைமுறை அமலில் இருக்கிறது. இத்தகைய நடைமுறை அவசியம்தான் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. இது எல்லோருக்கும் தேவை இல்லை... அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இந்த நடைமுறையைப் பின்பற்றலாம் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து உங்கள் மேலான கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/DHyEnQR

Post a Comment

0 Comments