நவம்பர் 1-ம் தேதியான நேற்று, தமிழ்நாடு நாளாகவும் உள்ளாட்சிகள் தின நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. உள்ளாட்சிகள் தின நாளையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் கிராம சபைக்கூட்டம் நடந்து முடிந்தது.
இதில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேட்டமலை ஊராட்சியில், பஞ்சாயத்து பணியாளர்கள் 6 பேரை மட்டும் வைத்து கிராம் சபை கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து ஊர்மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில், "மேட்டமலை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து நிர்வாகமாக எங்கள் ஊர் விளங்கி வருகிறது.
உள்ளாட்சிகள் நாளையொட்டி மேட்டமலை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர்கள் என 6 பேரை கொண்டு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. ஊர் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் பஞ்சாயத்து ஊழியர்களை மட்டும் வைத்து நடைபெற்ற இந்த கிராமசபைக் கூட்டத்தை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா? என்று தெரியவில்லை. ஏற்கனவே, மேட்டமலை கிராமத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பஞ்சாயத்து செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாயத்து நிர்வாகத்தின் காசோலை கையாளுதல் உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு குளறுபடிகள் உள்ள மேட்டமலை பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை" என்றனர்.
மேட்டமலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி தெரிவிக்கையில், "அரசு அறிவித்தபடி மேட்டமலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காலை 10:40 மணிக்கு தொடங்கி 11:20-குள்ளாக கூட்டம் முடிந்துவிட்டது. அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்திருந்த துப்புரவு பணியாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை ஒரு சிலர் வேண்டுமென்றே புகைப்படம் எடுத்து பொய்யாக செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர். ஆகவே 6 பேரை மட்டும் வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றதாக பரப்பப்படும் செய்தி உண்மை அல்ல" எனக் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிள்ளையார்குளம் ஊராட்சியில், கடந்த அக்டோபர் 2-ந்தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கேள்விக்கேட்ட விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்து தாக்கினார். இந்த விவகாரத்தின் பரபரப்புகளோடு பிள்ளையார்குளம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மீண்டும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விவசாயி அம்மையப்பன் பங்கேற்று தன்னுடைய கேள்விகளை முன்வைத்தார். அப்போது கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், "மக்களுக்கு அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, வேறு வழியில் செலவு செய்யப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
மக்களுக்கு அடிப்படை வசதிக்கேட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் சொன்னால் மனுவாக எழுதி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். தேர்தலுக்காக ஓட்டு வாங்க வரும்போது மட்டும் மக்களை நேரில் வந்து பார்க்கும் அரசியலாளர்கள், வெற்றி பெற்றவுடன் திரும்ப அந்த பகுதிக்கே வருவதில்லை" என ஆவேசமாக பேசினர்.
இதனால் கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரிகள் - பொதுமக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 'விரைவில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்' என உறுதி அளித்ததை தொடர்ந்து சலசலப்பு முடிவுக்கு வந்தது.
ராஜபாளையம் ஒன்றியம், சொக்கநாதன்புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சாந்தி மீது ஆரம்பம் முதலே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து பொதுமக்கள் பேசினர். நிலைமையை சமாளிக்க, ஊராட்சி தலைவரின் கணவர் கடல்கனி என்பவர் வெள்ளைத்தாளில் தான் செய்த நலத்திட்டங்கள் குறித்து எழுத முற்பட்டார். ஆனால், ஊராட்சி செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருந்த பொதுமக்கள், கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/tRqonET
0 Comments